பிரபல வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவு

பிரபல கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன்(92) உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.கர்நாடக இசைத் துறையில் வயலின் இசைப்பதில் தனி முத்திரை பதித்தவர் டி. என். கிருஷ்ணன். கேரள மாநிலம் திருப்பூணித்துறையில் பிறந்த டி.என். கிருஷ்ணன் தனது இளம்வயதில் அதாவது 1940களில் குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறினார். சிறு வயது முதலே வயலின் இசை மீது ஆர்வம் கொண்டிருந்த கிருஷ்ணன் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யரிடம் இசைப் பயிற்சி பெற்றார்.

இளம் வயதிலேயே புகழ் வாய்ந்த பாடகர்கள் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எம்.டி.ராமநாதன், ஆலத்தூர் சகோதரர்கள் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். அதன் பின்னர் தனியாகப் பல வயலின் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகவும் டி.என். கிருஷ்ணன் பணிபுரிந்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் கலைப் பள்ளியின் முதல்வராகவும் கிருஷ்ணன் பணியாற்றினார். அவரது சாதனைகளைப் பாராட்டி 2006 ல் அவருக்குச் சங்கீத நாடக அகாதெமி விருது அளிக்கப்பட்டது.மேலும் சங்கீத கலாநிதி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டு மத்திய அரசின் "பத்மவிபூஷண்' விருது பெற்றார்..கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.என். கிருஷ்ணன் நேற்று அவர் காலமானார்.

More News >>