அமெரிக்கத் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிக்காக திருவாரூரில் சிறப்பு வழிபாடு.. கிராமத்தில் வாழ்த்து பேனர்கள்..
அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென்று அவரது பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று(நவ.3) இன்று நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
கமலா ஹாரிசின் தாயார் சியாமளா கோபாலன், தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது பூர்வீகம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் ஆகும். அங்குள்ள தர்மசாஸ்தா கோயில்தான், அவரது குடும்பத்தினரின் குலதெய்வக் கோயிலாகும். இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென்று சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும், கிராமம் முழுவதும் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் பேனர்களை வைத்துள்ளனர்.