மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. கமல்நாத் நம்பிக்கை..
மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கமல்நாத் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம், காங்கிரசில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுத்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது. சிவராஜ் சவுகான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவினர். இந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் இளம்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள்.
இவர்கள் கட்சித் தாவுவதற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதே போல், ஏற்கனவே எம்.எல்.ஏ இறந்து விட்டதால் காலியாக இருந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளில் இன்று(நவ.3) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரசில் இருந்து கட்சி பாஜக ஆட்சியின் அமைச்சர்களாகி உள்ள 12 பேர் உள்பட 355 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் கமல்நாத் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சிவராஜ்சிங் சவுகான் எப்போதும் பொய் பேசி வருகிறார். அவரது ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளுமே நடக்கவில்லை. கடந்த 6 மாத பாஜக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.
மேலும் கட்சி தாவியவர்களுக்கு பதிலடி கொடுக்க அவர்கள் தயாராகி விட்டார்கள். எனவே, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள். காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும்என்று தெரிவித்தார்.