டெல்லியில் இருந்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வுஹான் சென்ற 19 இந்தியருக்கு கொரோனா
டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சீனாவிலுள்ள வுஹான் சென்ற 19 இந்தியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழுடன் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து உச்சக் கட்டத்திலேயே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது நோயின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
உலக அளவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 73 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 லட்சத்து 68 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று காலை வரை 1,23,139 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 38,310 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது.
கடந்த மாதம் இந்தியாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணிநேரத்தில் 490 பேர் இந்தியாவில் மரணமடைந்துள்ளனர்.இந்நிலையில் கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இங்கு மக்கள் சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் 'வந்தே பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ் நேற்று டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் சீனாவிலுள்ள வுஹானுக்கு சென்றது.
இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழுடன் தான் பயணம் செய்தனர். வுஹான் சென்ற பின்னர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 19 பேருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் 39 பயணிகளுக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டன. விமானத்தில் புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தி நோய் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இதற்கு முன்பும் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் மும்பையில் இருந்து ஹாங்காங் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சில பயணிகளுக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து வரும் 10ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடைவிதித்துள்ளது. இதற்கு முன்பும் ஹாங்காங் சென்ற 3 ஏர் இந்தியா விமானங்களில் சென்ற பயணிகளுக்கும் நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது.