ஆஸ்திரேலிய தொடரில் ரோகித்துக்கு இடம் கிடைக்குமா? பிசிசிஐ தலைவர் கங்குலி பதில்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இப்போது இடம் இல்லாவிட்டாலும் அவர் எப்போது காயத்தில் இருந்து முழுமையாக மீள்கிறாரோ அந்த நிமிடமே அணியில் இருப்பார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த உடனேயே இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்கிறது.

ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 டி20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் சர்வதேச ஒருநாள் போட்டி நவம்பர் 27ம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது. இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான இந்திய வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த 3 அணிகளிலும் துணை கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் உள்படப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் காயமடைந்த மாயங்க் அகர்வாலுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியது: ஆஸ்திரேலிய தொடரில் முழுமையாக உடல் திறன் உள்ள ரோகித் தான் நமக்கு வேண்டும். அவர் எப்போது முழு உடற்தகுதி பெறுகிறாரோ அடுத்த நிமிடமே அணியுடன் இணைய வாய்ப்பு உண்டு. தேர்வுக் குழுவினர் அது குறித்துக் கண்டிப்பாக பரிசீலிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தற்போது அவர் அணியில் இல்லை என்பதற்காக மீண்டும் அவர் அணியில் இடம்பெற மாட்டார் என கருதவேண்டாம். அவருக்கு எப்போது முழு உடற் தகுதி பெருக்கிறாரோ அவர் உடனடியாக அணியுடன் சேருவார். இதேபோல இஷாந்த் சர்மாவுக்கும் முழு உடல் தகுதி ஏற்பட்டால் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும். இவர்கள் இருவரும் தற்போது அணியில் இடம் பெறாவிட்டாலும் பின்னர் இவர்களை ஆஸ்திரேலியா அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் விமான சர்வீஸ் இருக்கிறது. ரோகித் மற்றும் இஷாந்த் சர்மாவின் காயம் குறித்து இந்த கிரிக்கெட் வாரியம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

More News >>