கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான காலம்.. வீடியோ வெளியிட்டு ரசிகர்களை நெகிழ்ச்சிபடுத்திய வாட்சன்!
பெரிய தோல்விகளை இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி சந்தித்தது. கடைசி மூன்று போட்டிகளில் வென்றது ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்தது. இந்நிலையில் சென்னை அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. சீனியர் வீரர்களை தூக்க வேண்டும் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. நேற்று பேசிய தோனியும் அதற்கேற்ப, இளைஞர்களிடம் அணியை ஒப்படைக்க தகுந்த நேரம் இது தான் எனப் பேசினார். இந்நிலையில் சென்னை அணியின் மூத்த வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும், வாட்சன் தரப்பிலும், சிஎஸ்கே அணி தரப்பிலும் இன்னும் இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
தற்போது இதனை உறுதிப்படுத்தி சென்னை ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார் வாட்சன். அதில், ``நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகள் என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான காலம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் வாட்சன். இதனையடுத்து வாட்சனின் ஆட்டத்தை நியாபகப்படுத்தி அவருக்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர் சென்னை அணி ரசிகர்கள்.