எல்டிஎல்லை குறைக்கும்... கருவுக்கு நல்லது... இதயத்திற்கு இதம் சேர்க்கும்...

நாம் அன்றாடம் சாப்பிடும் சில காய்கறிகளில் நினைத்துப் பார்க்க இயலாத அளவு சத்துகள் உள்ளன. அவற்றிலுள்ள நன்மைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கூட நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட நல்ல காய் கொத்தவரங்காய். கொத்து கொத்தாகக் காணப்படுவதால் கொத்தவரை என்று அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் பி தொகுப்பு, தாது உப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து அடங்கியுள்ளன. கொத்தவரையில் குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து, புரதம், கார்போஹைடிரேட் ஆகியவை அடங்கியுள்ளன.

100 கிராம்

நறுக்கிய கொத்தவரை 100 கிராம் அளவு எடுத்தால் அதில் 16 கலோரி எரிசக்தி, 3.2 கிராம் புரதம், 10.8 கிராம் கார்போஹைடிரேட், 0.4 கிராம் கொழுப்பு மற்றும் 5.4 கிராம் நார்ச்சத்து ஆகியவை இருக்கும்.

நீரிழிவு

கொத்தவரங்காய் 'சீனி அவரைக்காய்' என்றும் அழைக்கப்படுகிறது. பெயரைப் பார்த்து நீரிழிவு பாதிப்புள்ளோர் இதை விலக்கிவிடக்கூடாது. நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்ப் பாதிப்புள்ளோருக்கு ஏற்ற காய் கொத்தவரங்காய். சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைக் குறிக்கும் கிளைசமிக் இன்டெக்ஸ் என்ற குறியீடு இதற்கு மிகவும் குறைவாகும். கொத்தவரங்காயில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதால் சர்க்கரை நோயாளிகள் இதைத் தைரியமாகச் சாப்பிடலாம்.

உடல் எடை

கொத்தவரங்காய் குறைந்த கார்போஹைடிரேட் கொண்டது. உடல் எடை அதிகரிக்கக்கூடாது என்று கவனமாகச் சாப்பிடுவோர், இதைச் சாப்பிடலாம். சர்க்கரை அளவு மற்றும் உடல் எடை ஆகியவற்றில் பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமல்ல அனைவரும் சாப்பிடக்கூடிய காயாகும்.

எலும்பு ஆரோக்கியம்

எலும்புகளுக்கு நல்ல வலிமை வேண்டுமானால் புரதம் (புரோட்டீன்), கால்சியம் (சுண்ணாம்புச் சத்து), பாஸ்பரஸ் ஆகிய சத்துகள், தாது உப்புகள் தேவை. கொத்தவரங்காயில் இந்த சத்துகள் அனைத்தும் உள்ளன. பால் பொருள்களுடன் கொத்தவரங்காயையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்புகள் பலன் பெறும்.

கொலஸ்ட்ரால்

கொத்தரவங்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இது இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. உடலுக்குக் கெடுதல் செய்யும் கொலஸ்ட்ராலை (எல்டிஎல்) குறைப்பதால் மொத்த கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் இரண்டும் கட்டுக்குள் இருப்பதால் இதயம் ஆரோக்கியம் பெறுகிறது. ஃபோலேட் சத்து அதிக அளவில் சீனி அவரைக்காயில் உள்ளது. இதுவும் இதயத்தின் நலனைப் பாதுகாக்கிறது.

சிசு நலம்

கருத்தரித்தலின் முதல் மூன்று மாதங்களுக்கு மகப்பேறு மருத்துவர்கள் ஃபோலேட் சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பர்.

கருவிலுள்ள சிசுவின் மூளை வளர்ச்சிக்கு ஃபோலேட் அவசியம். ஆகவே, குழந்தைப் பேற்றை எதிர்பார்க்கும் மற்றும் கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு கொத்தவரங்காய் நலம் பயப்பதாகும்.

வயிற்றுக்கு நலம்

கொத்தவரங்காயில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து வயிற்றில் தங்கியிருக்கக்கூடிய தேவையற்ற நச்சுக்களை அகற்றுகிறது. அதன் மூலம் செரிமானம் தொடர்புடைய மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

More News >>