பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம், செங்கல் வீசப்பட்டதால் பரபரப்பு
பீகாரில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த முதல்வர் நிதீஷ் குமார் மீது வெங்காயமும், செங்கல்லும் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 'வீசுங்கள் இனியும் வீசுங்கள்' என்று கூறியபடியே நிதிஷ்குமார் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார்.பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டத்தில் கடந்த 28ம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இரண்டாவது கட்டமாக 94 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக வரும் 7ம் தேதி 78 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள 78 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும் முக்கிய தலைவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மதுபனி தொகுதியிலுள்ள ஹார்லகி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். பீகார் மாநிலத்தில் தொழில் வாய்ப்புகள் குறித்து அவர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். நிதிஷ்குமாரின் பேச்சைக் கேட்பதற்காக அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்த சமயத்தில் கூட்டத்திலிருந்த ஒருவர் திடீரென ஒரு வெங்காயத்தையும் செங்கல் துண்டையும் தூக்கி நிதிஷ்குமார் மீது வீசினார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் நிதீஷ் குமாரின் அருகே சென்று நின்று கொண்டனர். மேடையில் இருந்த கட்சித் தலைவர்களும் பதற்றம் அடைந்தனர்.ஆனால் முதல்வர் நிதிஷ்குமார் எந்த பதற்றமும் அடையாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'வீசுங்கள் இனியும் வீசுங்கள், நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன்' என்று கூறிய அவர் பேச்சை முடித்த பின்னர் தான் அங்கிருந்து சென்றார். முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் மற்றும் செங்கல் வீசப்பட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.