இந்த ஆபரேஷனில் ரஜினி, கமல் இல்லை - நடிகர் சிவாஜி அடுத்த அதிரடி
ஆபரேஷன் ராவணாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இல்லை என்று தெலுங்கு நடிகர் சிவாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தெலுங்கு நடிகர் சிவாஜி, “2019ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையும், சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையும் மனதில் வைத்து ஒரு தேசிய கட்சி ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகியா மாநிலங்களில் பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த ஒட்டு மொத்த திட்டத்திற்கு ‘ஆபரேஷன் திராவிடம்’ என பெயர் சூட்டியுள்ளது.
தமிழகம், கேரளாவுக்கு ‘ஆபரேஷன் ராவணா’, ஆந்திரா, தெலங்கானாவுக்கு ‘ஆபரேஷன் கருடா’ கர்நாடகத்துக்கு ‘ஆபரேஷன் குமார்’ என பெயர் சூட்டி செயல்படுத்தி வருகிறது. இந்த அரசியல் ஆபரேஷன்களை நடத்த ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ எனப்படும் ரகசிய உளவாளிகளை அந்தந்த கட்சிக்குள் ஊடுருவச் செய்திருக்கிறது.
மேலும் அரசியல் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரூ.4,800 கோடியை அந்த கட்சி ஒதுக்கி செலவிட்டு வருகிறது. இதற்காக ஒடிஷா, பீஹார் மாநிலங்களில் இருந்து கூலிப்படை வரவழைக்கப்பட உள்ளது" என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இது குறித்து தனியார் செய்தி நாளிதழுக்கு நடிகர் சிவாஜி அளித்துள்ள பேட்டியில், ரஜினிக்கு பின்னால் பாஜக உள்ளது என சிலர் நினைக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என கூற முடியுமா? ரஜினி ஒரு ஆன்மிகவாதி.
இதை வைத்து, அவர் பாஜகவை சேர்ந்தவர் என நினைக்க கூடாது. இவரை பாஜக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. ரஜினி மக்கள் செல்வாக்கு மிக்கவர். இவர் பாஜகவுடன் சேராமல் சுயமாக அரசியல் களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
மேலும், ஆபரேஷன் திராவிடம் திட்டத்தில் இருப்பவர்கள் யார்? என்று கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “கமல், ரஜினி போன்றோர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தனர். இதனால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
2ஜி வழக்கில் ஒரு கட்சியை சேர்ந்தவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வருகிறது. ஆனால், எனக்கு தெரிந்தவரை, நடிகர்கள், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இந்த ‘ஆபரேஷன் ராவணா’ வில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com