வெறித்தனமாக மும்பை வீழ்த்தி, பிளே ஆஃப்ல் நுழைந்த ஹைதராபாத் அணி!
ஐபிஎல் லீக் சுற்றின் கடைசி போட்டி ஷார்ஜாவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்தது. மும்பை அணி 9 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், ஐந்தாவது இடத்தில் இருந்த ஹைதராபாத் அணிக்கு இந்த போட்டி வாழ்வா? சாவா? இந்நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆடுகளத்தில் இதற்கு முன்னர் இந்த இரு அணிகளும் சந்தித்தபோது மும்பை அணி அதிரடியாக ஆடி 208 ரன்களை விளாசியது, இந்த இலக்கை எட்ட முடியாமல் ஹைதராபாத் அணி தோற்றதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்குள் நுழைந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த முறையும் ஒற்றை இலக்கத்தில், சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
இதற்கு பொல்லார்டே கேப்டன்ஷிப் செய்து இருக்கலாம். பின்னர் டி-காக் உடன் சூர்ய குமார் யாதவ் கைகோர்க்க இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டி-காக் தனது ஆட்டத்தை முதல் கியரிலிருந்து இரண்டாவது கியருக்கு வேகத்தை கூட்டும் போது, எதிர்பாராத விதமாக சந்தீப் ஷர்மா ஓவரில் இன்சைடு எட்ஜ் ல் போல்டாகி வெளியேறினார். பவர்பிளே ஓவர் முடிவதற்குள் மும்பை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. டைல் எண்டு வரை பேட்ஸ்மேன் களை கொண்ட மும்பை அணியில் சரியான பார்ட்னர் ஷிப் கடைசி வரை அமையவில்லை. சூர்ய குமார் யாதவ் (36), இஷான் கிஷான் (33), பொல்லார்ட் (41) ஆகிய ரன்களில் அவுட்டாக மும்பை அணி இருபது ஓவர் முடிவில் 149/8 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் வேகமாக பந்து வீசவில்லை என்றாலும், நேர்த்தியாக பந்தை ஸ்விங் செய்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்தனர்.
ஐபிஎல் லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் இருந்து சந்தீப் ஷர்மா மிக சிறப்பாக பந்து வீசுவது அணியின் மிகப்பெரிய பலம். சந்தீப் ஷர்மா இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷதாப் நதீம் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு பலம் சேர்த்தனர். மும்பை அணியின் ஆஸ்தான பவுலர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு குலகர்னிக்கு நேற்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஹைதராபாத் அணிக்கு இருபது ஓவரில் 150 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஓவருக்கு 7.5 ரன்கள் வீதம் எடுத்தால் போதும் என்ற நிலையில் ஹைதராபாத் அணியின் தொடக்க இணையான கேப்டன் வார்னர் மற்றும் விக்கெட் கீப்பர் சஹா களம் கண்டனர். இருவரும் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிக இயல்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிக் டாக் மன்னன் வார்னர் இந்த போட்டியில் கேப்டன் இன்னிங்க்ஸை ஆடி அசத்தினார். வார்னர், சஹா இந்த இணையை மும்பை அணியால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை.
வாய்ப்பு கிடைத்த அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட சஹா இந்த போட்டியிலும் தொடர்ந்தார். ஹைதராபாத் அணி 17.1 ஓவரில் 151 என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிபிடித்து அசத்தியது. இந்த சீசனில் விக்கெட் இழப்பின்றி சேசிங் செய்யப்பட்ட இரண்டாவது போட்டி இதுவாகும். ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் 58 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சர் என 85 ரன்களை விளாசி அசத்தினார். மறுபுறம் சிறப்பாக ஆடிய சஹா 45 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சரில் 58 ரன்களை விளாசி தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார். ஹைதராபாத் அணியின் சுழல் பந்து வீச்சாளரான ஷதாப் நதீம் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 7 வெற்றிகளை பெற்று 14 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைந்தது. ஹைதராபாத் அணியின் இந்த வெற்றியால் கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் கனவு கானலாகி போனது.