கொரானாவை காரணம் காட்டி தடை கேட்காதீங்க.. படபடக்கும் பட்டாசு தயாரிப்பாளர்கள்.
பட்டாசு விற்பனையில் இந்தியாவின் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்வது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு கொரானாவால் அந்த நெருக்கடி வந்திருக்கிறது. கொரானா தொற்று நோயை காரணம் காட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையே சாக்காக வைத்துக் கொண்டு பல மாநிலங்களிலும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிலர் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதுகுறித்து சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர் சிலர் கூறுகையில்: கொரானாவிற்கும் பட்டாசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் தரக் கட்டுப்பாட்டின் படி அனுமதிக்கப்பட்ட மூலப்பொருட் களை மட்டுமே கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த பட்டாசுகளால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சான்றும் வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதியில்லாத மூலப் பொருட்களால் தயாராகும் சீனப்பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி பயன்படுத்தப்பட்டால் அதன் மூலமாகத்தான் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனுமதியில்லாத பட்டாசுகள் மெர்குரி, லெட், ஆர்சானிக், ஆண்டிமணி, லித்தியம், குரோம்மேட் போன்ற ஆறு விதமான தடைசெய்யப்பட்ட பொருட்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்ட மூலப்பொருட்கள் மட்டுமே இந்தியப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதால் அதன் மூலமாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே தீபாவளி பண்டிகை விற்பனைக்காக வடமாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பப்பட்டு விட்டது. இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தற்போது கொரானா தொற்று பரவலை காரணம் காட்டி பட்டாசு வெடிக்க தடை கோருவது என்பது சரியான நடவடிக்கை அல்ல.
இதன் காரணமாக பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதுடன் அந்தந்த மாநிலங்களில் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கி விட ஒரு வாய்ப்பாக இது அமைந்துவிடும். அப்படி விற்பனையாகாமல் தேங்கி இருப்பு வைக்கப்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டிற்கான பட்டாசு உற்பத்தியை நாங்கள் வழக்கம்போல் தொடங்க முடியாது. அதில் காலதாமதம் ஏற்படுவதுடன், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலகட்டத்தில் சுமார் பல மாதங்களாக பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வருமானத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். இப்படி தவித்து வரும் நிலையில் பட்டாசு வெடிக்க தடை என்பது எங்களுக்கு பேரிடியாக உள்ளது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் தினமும் உற்பத்தியாகும்.
பட்டாசுகளின் மாதிரிகளை வெடிப்பதும், அதேபோல் தினந்தோறும் கழிவு பட்டாசுகளை கொளுத்துவதும் வழக்கமான ஒன்றாகும். இதன் காரணமாக விருதுநகர் மாவட்ட உள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. அதே போன்று ராம ஜென்மபூமி கட்ட தொடங்கிய விழாவின்போது பட்டாசுகள் வெடித்து கொண்டாடியது எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இந்த சமயத்தில் கொரா என்பதை காரணம் காட்டி பட்டாசு உபயோகபடுத்தும் நேரத்தில் வெடிக்கக் கூடாது என்று தடை விதிப்பது சரியான தீர்வு இல்லை எனவே இந்த பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்தால் மட்டுமே இந்த பட்டாசு தொழிலையும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்றனர்.