விஜய் நடித்த போக்கிரி பட எடிட்டர் திடீர் மரணம்.. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..

கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல் எதிர்பாராத உயிரிழப்புக்கள் திரையுலகினரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இவருக்கு கொரோனா தொற்று வருமா என்று யாரும் நினைத்து பார்க்காத நிலையில் நடிகர் அமிதாபச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மாதக்கணக்கில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார்.அந்த அனுபவத்தை அவர் பகிர்ந்தபோது கொரோனாவினால் ஏற்பட்ட தனிமை எவ்வளவு கொடூராமாக இருந்தது என்பதை உணர்த்தியது. நடிகை ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன், விஷால், ராஜமவுலி , எஸ்பி. பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா என பலருக்கு கொரோனா தொற்று பரவியது.

இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறகு மீண்டாலும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். டாக்டர் நடிகர் ராஜசேகர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். கொரோனா தொற்றில்லாத நிலையில் மாரடைப்பில் இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் சேது. வடிவேல் பாலாஜி, விசிறி பட இளம் இசை அமைப்பாளர் நவீன் சங்கர் மரணம் அடைந்தனர். அதேபோல் பிரபல இந்தி நடிகர் ஃபராஸ் கான் இருமல் நெஞ்சுவலியால பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்தார். தற்போது மற்றொரு அதிர்ச்சியாக பிரபல திரைப்பட எடிட்டர் திடீர் மரணம் அடைந்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த குஷி, போக்கிரி. தனுஷ் நடித்த புதுப்பேட்டை, மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி, கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், பரத் நடித்த கண்டேன் காதலை, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, கேடி உள்ளிட்ட பல்வேறு படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர். வயது 55.

இவர் சில காலமாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், பாலகிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். தென்னிந்திய மொழி படங்களில் பணியாற்றியதற்காக இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. எடிட்டர் கோலா பாஸ்கர் மறைவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News >>