`மக்களின் உணர்வுகளுடன் விளையாடதீர்கள்..!- மோடி மீது கடுகடுத்த சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, `மோடி அரசு மக்களின் உணர்வுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடு, `மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆந்திர பிரதேசத்துக்கு ஒதுக்குவதாக உறுதியளித்த நிதியை அளிக்கவில்லை. இதற்கு மேலும் அவர்களுடனான கூட்டணியில் இருப்பது சரியென்று எங்களுக்குத் தோன்றவில்லை.
எனவே, தெலுங்கு தேசம் கட்சி, பாஜக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறது’ என்று கூறி இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், `நீங்கள் இந்த முடிவை வளர்ச்சியை முன் வைத்து எடுக்காமல், அரசியல் ஆதாயத்தை முன் வைத்து எடுத்துள்ளீர்கள்.
உங்கள் மாநிலத்துக்கு ஒதுக்கிய நிதியை உங்கள் தலைமையிலான அரசு சரியாக பயன்படுத்தவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு சந்திரபாபு நாயுடு தரவுகளை முன் வைத்து பதிலடி கொடுத்தார். மேலும், `தேவையில்லாமல் ஆபாண்டமாக பொய் உரைக்காதீர்கள் அமித்ஷா’ என்றும் தெரிவித்தார். இப்படி ஆந்திராவுக்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சந்திரபாபு நாயுடு, மோடியைத் தாக்கி பேசியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு மோடி குறித்து, `ஆந்திராவுக்கு ஒதுக்குவதாக சொன்ன நிதியை சரிவர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கவில்லை. இது மக்களின் உணர்களுடன் விளையாடுவது. இது தற்சமயம் சில அரசியல் ஆதாயங்களைத் தரலாம். ஆனால், தேசத்திற்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.
நாம் அரசியலில் வேறுபட்டிருக்கலாம். ஆனால், தேசத்தை சேதப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காதீர்கள். அது நல்லதுக்கல்ல’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com