ரோகித் சர்மா விவகாரம் ரவிசாஸ்திரி பொய் சொல்கிறார் சேவாக் விமர்சனம்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வில் எனக்கு எந்த பங்கும் இல்லை என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுவதை நம்ப முடியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது மர்மமாக இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் போட்டிகள் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்காக செல்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27ம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான வீரர்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டனர். இதில் துணை கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ரோகித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக பரவலாக கூறப்படுகின்ற போதிலும், தற்போது ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடி வருவதால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், இந்திய அணி தேர்வில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், தேர்வுக் குழு தான் வீரர்களை தேர்வு செய்வதில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் கூறினார். மருத்துவக் குழுவின் அறிக்கையை பரிசீலித்த பின்னரே வீரர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். ரவிசாஸ்திரியின் இந்த கருத்துக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேவாக் கூறியது: வீரர்கள் தேர்வில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ரவிசாஸ்திரி கூறுவது நம்பும்படியாக இல்லை. அவர் பொய் சொல்லுகிறார்.
ரோகித் சர்மா அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ரவி சாஸ்திரி கூறுகிறார். ஆனால் எந்த காரணம் கொண்டும் இதை நம்ப முடியாது. தேர்வுக் குழுவில் அவர் இல்லாவிட்டாலும், அணியை தேர்வு செய்வதற்கு முன்பாக கண்டிப்பாக பயிற்சியாளரின் ஆலோசனையும் கேட்கப்படும். கண்டிப்பாக தேர்வுக் குழுவினர் அவரிடம் கருத்து கேட்டிருப்பார்கள். அவரும் யார், யார் அணிக்கு வேண்டும் என்பது குறித்து கூறியிருப்பார். இதேபோல கேப்டனிடமும் தேர்வுக் குழுவினர் ஆலோசனைகளை கேட்பார்கள். இதன் பின்னர் தான் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ரோகித் சர்மா விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமும், தேர்வுக் குழுவும் தவறு செய்து விட்டது என்றே நான் கருதுகிறேன். அவருக்கு முழு முழு உடற் தகுதி இல்லாவிட்டாலும் அணியுடன் சேர்த்திருக்கலாம். முக்கியமான கட்டத்தில் அவரை பயன்படுத்த முடியும்.
எதற்காக ரோகித்தை தேர்வு செய்யவில்லை என்று இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதில் ஏதோ மர்மம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அவரது காயம் மோசமாக இருந்தால் அப்போது அவருக்கு பதிலாக வேறு யாரையாவது அணியில் சேர்க்கலாமே. ஆனால் அவரை அணியில் கூட தேர்வு செய்யாதது ஏன் என்பது தான் எனக்கு புரியவில்லை. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா விளையாடினார். அடுத்த போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என்பது உறுதி. தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று ரோகித் கூறுகிறார். அப்படி இருக்கும்போது எதற்காக அவரை தேர்வு செய்யவில்லை? என்று கேள்வி எழுப்புகிறார் சேவாக்.