அர்னாப் கோஸ்வாமி கைது.. அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கொதிப்பு..
அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தது எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது என்று அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவின் ஆதரவு சேனலான ரிபப்ளிக் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் மற்றும் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, மும்பையில் இருந்து கொண்டே மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். எப்போதுமே பாஜகவைத் தவிர மற்ற கட்சியினரை மிகவும் மட்டமாக விமர்சித்து அந்த டி.வி. செய்திகளை வெளியிடுவது வழக்கம். சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரேவையும், அந்த கூட்டணி அரசையும் ரிபப்ளிக் டி.வி. கடுமையாக விமர்சித்தது, அரசுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. இந்த சூழலில், அர்னாப் கோஸ்வாமியை மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2018ம் ஆண்டில் கன்கார்டே டிசைன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி, ரிபப்ளிக் டி.வி. கம்பெனிக்கு இன்டீரியர் வேலைகளை செய்து கொடுத்திருக்கிறது. இதற்கு கட்டணமாக 5 கோடியே 40 லட்சம் தராமல், அர்னாப் கோஸ்வாமி மோசடி செய்து விட்டதாக கான்கார்டே டிசைன்ஸ் உரிமையாளர் அன்வாய் நாயக் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 2018ல் அவரும், அவரது தாயார் குமுத் நாயக்கும் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக கூறி, அர்னாபை கைது செய்தனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் மகாராஷ்டிர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர், காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஜனநாயகத்தை அவமதித்து விட்டனர். அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரிபப்ளிக் டிவி மீதும், அர்னாப் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது 4வது தூணாக விளங்கும் மீடியாவின் மீதான தாக்குதலாகும். இது எமர்ஜென்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது. மீடியா சுதந்திரத்தின் மீதான தாக்குதலை எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் அர்னாப் கைதை கண்டித்து பதிவிட்டனர். அனைவருமே காங்கிரஸ் காலத்து எமர்ஜென்சியை இது நினைவுபடுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தனர். பாஜக தலைவர்கள் கொதித்தெழுந்த போதும், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் யாரும் அர்னாப்புக்காக குரல் கொடுக்கவில்லை. மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சட்டம் தனது கடமையைச் செய்கிறது. யாருமே சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்று கூறினார். சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், போலீசார் முறையாக விசாரணை நடத்தியே நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், பாஜக ஆளும் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் எத்தனை பத்திரிகையாளர்கள் மீது உபா சட்டத்தில் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் பாஜகவுக்கு மீடியா சுதந்திரமே கண்ணுக்கு தெரியவில்லையா? என்று விமர்சித்திருக்கிறார்.