பொது இடத்தில் கோவில் அருகே ஆபாச வீடியோ படப்பிடிப்பு பூனம் பாண்டேவுக்கு எதிராக வழக்கு.

பிரசித்தி பெற்ற மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே குறித்து தெரியாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. கடந்த 2011 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், நான் மைதானத்தில் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்று கூறி இவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்தியா கோப்பையை வென்ற போதிலும் அவரால் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. பொது மக்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடும் எதிர்ப்பு தான் இதற்கு காரணமாகும். இதேபோல கடந்த 2012ம் ஆண்டு ஐபிஎல் 5 வது சீசனில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்படியே இவர் தனது நிர்வாண புகைப்படங்களை சமூக இணையதளங்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவாவில் வைத்து தன்னுடைய கணவர் சாம் பாம்பே தன்னை தாக்கியதாக கூறி பூனம் பாண்டே போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவரது கணவரை கோவா போலீசார் கைது செய்தனர். ஆனால் மிகக் குறுகிய நாட்களிலேயே இருவரும் மீண்டும் இணைந்தனர். இதெல்லாம் ஒரு நாடகம் என்று பின்னர் கூறப்பட்டது. இந்நிலையில் கோவாவில் உள்ள சப்போலி அணைக்கு அருகே கடந்த இரு மாதங்களுக்கு முன் பூனம் பாண்டே ஒரு ஆபாச வீடியோவை எடுத்தார். இந்த இடத்திற்கு அருகில் தான் பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அந்த ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து பூனம் பாண்டேவுக்கு எதிராக கோவா போலீசில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பூனம் பாண்டே மீது கோவா கனகோனா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவா நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் தான் பூனம் பாண்டேவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் பேர் இந்த வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெற்கு கோவா எஸ் பி பங்கஜ் குமார் சிங் கூறினார். இதுகுறித்து கோவா முற்போக்கு கட்சி தலைவர் துர்கா தாஸ் காமத் கூறுகையில், பொது இடத்தில் சப்போலி அணைப்பகுதியில் வைத்து ஆபாச வீடியோ படம்பிடிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தில் இதுபோன்ற வீடியோ படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவாவை ஒரு ஆபாச இடமாக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதன் மூலம் மாநிலத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும். எனவே கோவா முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

More News >>