காதலுக்கு எதிர்ப்பு காதலியின் அண்ணனை போட்டுத் தள்ளிய பைக் ஸ்டண்டர் கைது.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் பிரபல பைக் ஸ்டண்டரும், யூடியூபருமான வாலிபரை போலீசார் கைது செய்தனர். டெல்லி அருகே நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது. டெல்லி அருகே உள்ள நொய்டா செக்டர் 53 பகுதியைச் சேர்ந்தவர் நிசாமுல் கான். பிரசித்தி பெற்ற பைக் ஸ்டண்டரான இவர், சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். தன்னுடைய பைக் சாகச நிகழ்ச்சிகளை நிசாமுல் கான் யூடியூப் சேனலில் பகிர்ந்து வந்தார். இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இவரது யூடியூப் சேனலுக்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்நிலையில் நிசாமுல் கான், அதே பகுதியை சேர்ந்த கமல் சர்மா (26) என்பவரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன் ஒரு நண்பரின் வீட்டில் வைத்து நிசாமுல் கானுக்கு கமல் சர்மாவின் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் இவர்களது காதல் கமல் சர்மாவுக்கு தெரியவந்தது. இந்த காதலுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தங்கையின் செல்போனையும் அவர் வாங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நிசாமுல் கானுக்கு தன்னுடைய காதலியுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இது கமல் சர்மா மீது நிசாமுல் கானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் கமல் சர்மா இரவில் பணி முடிந்து அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து நொய்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளிகள் யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்தபோது பைக்கில் வந்த 3 பேர் கமல் சர்மாவை துப்பாக்கியால் சுடுவது தெரியவந்தது. ஆனால் முகம் தெளிவாக தெரியாததால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் கமல் சர்மாமாவை சுட்டுக் கொன்றது நிசாமுல் கான் மற்றும் அவரது நண்பர்களான சுமித் சர்மா மற்றும் அமித் குப்தா என தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

More News >>