தந்தையின் நடவடிக்கை சரியில்லை அவதூறு செய்தி வெளியிட்டதாக பிரபல நடிகரின் மகள் போலீசில் புகார்.
தந்தை மற்றும் தன்னை குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட மலையாள ஆன்லைன் மீடியாக்களுக்கு எதிராக பிரபல மலையாள நடிகர் திலீப்பின் மகள் போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து 4 ஆன்லைன் மீடியாக்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் திலீப். இவரது முதல் மனைவி மஞ்சு வாரியர். இவர்களுக்கு பிறந்தவர் மீனாட்சி (20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் விவாகரத்து ஆகி பிரிந்து விட்டாலும் மீனாட்சி தந்தையுடன் தான் இருக்கிறார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்ற போது யாருடன் செல்ல விருப்பம் என்று நீதிபதி கேட்ட போது, தந்தையுடன் தான் செல்ல விரும்புவதாக அவர் கூறினார். இதன்படி திலீப்புடன் தான் மீனாட்சி வசித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் திலீப் மற்றும் மீனாட்சி குறித்து சில மலையாள ஆன்லைன் மீடியாக்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவதூறு செய்திகள் வந்தன. அதில், தனது தந்தையின் நடத்தை சரியில்லாததால் மீனாட்சி கடும் அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் தாய் மஞ்சுவாரியரிடம் அவர் செல்லப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தாயின் பாசம் குறித்து மீனாட்சிக்கு இப்போது தான் நன்றாக புரிந்துள்ளது என்றும், சமீபகாலமாக தந்தையின் நடவடிக்கைகள் சரியில்லாதது அவருக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது என்றும் அந்த ஆன்லைன் மீடியாக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த ஆன்லைன் மீடியாக்களுக்கு எதிராக கடந்த மாதம் மீனாட்சி எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆலுவா கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
ஆனால் நேரடியாக அந்த ஆன்லைன் மீடியாக்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாத குற்றம் என்பதால் இதுகுறித்து போலீசார் நீதிமன்றத்தை அணுகி அனுமதி கேட்டனர். அதை பரிசீலித்த நீதிமன்றம், ஆன்லைன் மீடியாக்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்தது. இதையடுத்து அவதூறு செய்தி வெளியிட்ட 4 ஆன்லைன் மீடியாக்களுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.