சுந்தர் பிச்சைக்கு வாழ்த்து.. ஜெய்சங்கருக்கு எதிரி.. யார் இந்த பிரமிளா ஜெயபால்?!
பிரமிளா ஜெயபால் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் எம்பியாக மூன்றாவது முறையாக தேர்வாகி இருக்கிறார். பிரதிநிதிகள் சபையின் முதல் இந்தியப் பெண் எம்.பி என்ற பெருமையை ஏற்கனவே பெற்ற இந்த பிரமிளா தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். சென்னையில்தான் பிறந்தார். கல்விக்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயே சிட்டிசன்ஷிப் வாங்க, அங்கேயே அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டார். இவரின் அரசியல் பயணம் முதலில் சமூகப் பணிகளில் மூலமாகவே ஆரம்பித்தது. சமூகப் பணிகளில் நாட்டம் கொண்டு அதனை சிறப்பாக செய்யவே, அதுவே அவரை தீவிர அரசியலுக்குள் இழுத்து வந்தது.
பின்னர் ஜனநாயக கட்சி சார்பில் வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் போட்டியிட்டு அமெரிக்க - இந்தியர்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையின் முதல் இந்தியப் பெண் எம்.பியாக உள்ளே சென்றவர் திறம்பட பணியாற்றினார். இதனால் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைக்க, தற்போது மூன்றாவது முறையாக எம்பியாகி இருக்கிறார். இதே பிரமிளா ஜெயபால் இந்திய அமைச்சர் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க எம்.பி-க்களைச் சந்தித்து உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் குழுவில், பிரமிளா ஜெயபாலும் இடம்பெற்றிருந்தார்.
ஆனால் பிரமிளா, காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370-ஐ இந்திய அரசு ரத்து செய்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். இதற்கு ஒருபடி மேலே சென்று, காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரி, பிரதிநிதிகள் சபையில் ஒரு தீர்மானமும் கொண்டுவந்தார். இதனை மனதில் வைத்து, எம்.பி-க்கள் குழுவிலிருந்து பிரமிளாவை நீக்க வேண்டும் என ஜெய்சங்கர் கோரிக்கை வைக்கவே அது நடக்காமல் போனது. அதனால் ஜெய்சங்கர் - எம்பிக்கள் சந்திப்பும் நின்று போனது.
அதேநேரம், கூகுள் தொடர்பான புகார்களுக்கு அதன் சிஇஓ சுந்தர்பிச்சை அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்பு கடந்த வருடம் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். அப்போது, அங்கு இருந்த பிரமிளா, ``சுந்தர் நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன். நீங்கள் சிஇஓவாக இருந்து கூகுளை வழிநடத்திச் செல்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகின் மிக முக்கியமான இருவேறு பொறுப்புகளில் நாம் இருவரும் பதவி வகித்து வருகிறோம்" என்று பேசி வாழ்த்து தெரிவித்தார்.