இந்த உணவுகளை சாப்பிட்டால் குறட்டை வரும்... எவை தெரியுமா?
நாம் அதிகம் விரும்புவது எது தெரியுமா? நிம்மதியான உறக்கம்! "கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க முடியலை," இதுவே பலரது புலம்பல். நாள் முழுவதும் உழைத்துக் களைத்துப் போய் இரவில் படுக்கையில் விழுந்தால் தூங்கிவிட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. ஆனால், எல்லா எதிர்பார்ப்புகளும் நிறைவேறிவிடாததுபோல, தூங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பலருக்கு நிறைவேறுவதில்லை. அதற்கு ஒரு காரணம், குறட்டை.
பக்கத்தில் படுத்திருப்பவர் குறட்டை விட்டால் நம் தூக்கம் கெட்டுப்போகும். குறட்டை, ஆரோக்கியத்தின் ஒரு நிலைதான். தொண்டையில் இளக்கமாக இருக்கும் திசுக்கள் காற்று வரும்போது அதிர்வதால் குறட்டை எழும்புகிறது. தூக்கத்தின் பல்வேறு நிலைகளை பொறுத்து குறட்டை வருகிறது. இது நபருக்கு நபர் வேறுபடும். மூக்கின் பாதைகள் சுருங்கி, தொண்டையிலுள்ள திசுக்களும் தசைகளும் இளக்கமாகும்போது குறட்டை சத்தம் வருகிறது. குறட்டை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு எவ்வளவு வைத்தியம் பார்த்தாலும் குறட்டை நிற்பதில்லை. நாம் சாப்பிடும் உணவுகள் கூட குறட்டை விடுவதற்குக் காரணமாகின்றன என்று கூறப்படுகிறது.
கோதுமை
பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. ஆகவே, ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் அதை தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு உடல் மூலக்கூறுகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக கபம் உருவாகிறது. இந்த கபம் (சளி போன்ற கோழை) மூக்கின் மூச்சுப் பாதையை அடைத்து குறட்டை எழும்ப காரணமாகலாம்.
சர்க்கரை
சர்க்கரை ஆரோக்கியமானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இரவில் இனிப்பு கலந்த பானங்களை பருகுவது குறட்டைக்கு முக்கிய காரணமாகிறது என்பது தெரியுமா? பதப்படுத்தப்பட்ட சர்க்கரை தொண்டையிலுள்ள திசுக்களை பாதிப்பதுடன், சளியையும் உருவாக்குகிறது. இதன் காரணமாக மூக்குப் பாதை அடைபடுகிறது. மேலும் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய சைட்டோகைன்கள் உருவாக காரணமாகிறது. ஆகவே, சர்க்கரை மற்றும் சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட பானங்கள் குறட்டைக்கு காரணமாகின்றன.
அதிக கொழுப்புள்ள இறைச்சி
இறைச்சிகளில் அதிக கொழுப்பு மற்றும் அதிக புரதம் இருக்கும். இவை பூரித கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. சாட்சுரேட்டட் ஃபேட் என்னும் பூரித கொழுப்பு அதிகமாகும்போது குறட்டை எழும்புகிறது. ஆகவே, கொழுப்பு குறைவான இறைச்சிகளை மட்டும் சாப்பிட்டால் குறட்டையை தவிர்க்கலாம்.
பால் பொருள்கள்
இரவு படுக்கும் முன்னர் பால் பருகுவது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம். பால் பொருள்களுக்கு குறட்டையை தூண்டும் இயல்பு உண்டு. படுக்கைக்குச் செல்லும் முன்னர் பால் அருந்தினால் சளி போன்ற கோழை உருவாகும். அது குறட்டைக்குக் காரணமாகிறது.
மது
மது அருந்துவது நரம்புகளை தளர்த்தி நல்ல உறக்கத்தை கொடுக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இது தவறான நம்பிக்கையாகும். மதுவிலுள்ள ஆல்கஹால் தசைகளின் நிலையை மோசமாக பாதிக்கிறது. அதன் காரணமாகவும் குறட்டை எழும்புகிறது.