அமெரிக்க தேர்தலில் நீடிக்கும் குழப்பம்.. குடியரசு கட்சியினர் வழக்கு..

அமெரிக்காவில் பென்சில்வேனியா, மிக்சிகன், ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, டிரம்ப் கட்சியினர் வழக்கு தொடுத்துள்ளனர்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார்.

தேர்தல் முடிந்ததுமே உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் ஆகிய இருவருமே ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வந்தனர். இதனால், வெற்றியை நிர்ணயிப்பதில் இழுபறி நீடித்தது. மிச்சிகன் மாநிலத்தில் 16 இடங்களை கைப்பற்றியதை அடுத்து 264 இடங்களில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியிருக்கிறார். இன்னும் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை. தற்போது பென்சில்வேனியா, நவேடா உள்பட 5 மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். மேலும், மெயில் ஓட்டு என்னும் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். நவேடா என்ற சிறிய மாநிலத்தை ஜே பைடன் கைப்பற்றினாலே, அவர் அதிபராவதற்கான 270 இடங்களை பெற்று விடுவார்.இந்நிலையில், டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பென்சில்வேனியா, மிக்சிகன், ஜார்ஜியா ஆகிய மாநிலங்களில் குடியரசு கட்சியினர் நீதிமன்றங்களில் மாநில சட்டத்தின்படி வழக்கு தொடுத்துள்ளனர். அங்கு வாக்கு எண்ணும் மையங்களில் பார்வையிடுவதற்கு குடியரசு கட்சியினருக்கு முறையான அனுமதி வழங்கவில்லை என்றும் முறைகேடுகள் நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விஸ்கான்சிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும், பிலடெல்பியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவும் வழக்கு தொடுக்கப் போவதாக அதிபர் டிரம்ப்பின் வழக்கறிஞர் ரூடி ஜியுலியானி தெரிவித்துள்ளார்.

More News >>