இறுதி சுற்றுக்கு முன்னேறப்போவது யார்? மும்பையா? டெல்லியா?
ஐபிஎல் 2020 ன் இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் தருணம் இது. லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகளுக்கு அடுத்தடுத்த பலபரிச்சைகள் காத்திருக்கின்றன. அதில் முதல் பலபரிச்சையான தகுதி சுற்று 1 இன்று நடைபெறுகிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதத் தயாராகி வருகின்றன.
முதல் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி சற்றுக்குள் நுழையும். தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் விளையாட வேண்டிய வாய்ப்பு கிடைக்கும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்குள் நுழையும். எனவே இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெறப் போராடும்.இந்த போட்டியானது துபாய் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மும்பை அணியைப் பொறுத்தவரைப் பலமான பேட்டிங் யூனிட்டை கொண்டுள்ளது. முன்னணி பேட்ஸ்மென்களான கேப்டன் ரோகித் சர்மா, டி-காக், சூர்ய குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் என ஒரு பட்டாளமே உள்ளது. அசுரத்தனமான பேட்டிங் லைனப் மும்பையின் பலம்.எந்த இடத்தில் இருந்தும் அணியின் ரன்னை ராக்கெட் வேகத்தில் உயர்த்த மும்பை அணியின் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவால் முடியும்.
மும்பை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை பும்ரா மற்றும் போல்ட் சிறப்பாக இந்த சீசனில் செயல்படுவது அணிக்கான பலம். சுழல் பந்துவீச்சைப் பொறுத்தவரை க்ருனால் பாண்டியா மற்றும் ராகுல் சஹர் அசத்தி வருகின்றனர். மொத்தத்தில் மும்பை அணி அனைத்து கலவையிலும் உள்ள ஒரு மசாலா படம்.
டெல்லி அணியைப் பொறுத்தவரை அவர்களுக்கான சரியான பிளேயிங் லெவன் கிடைக்காதது மிகப்பெரிய பலவீனம். இந்த சீசனின் தொடக்கத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பிற்பாதியில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியுற்று வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி.
டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை தவான் தவிர்த்து வேறு யாரும் தொடர்ச்சியாக ரன் சேர்க்காதது அணிக்கான பலவீனம். தவானும் ஐந்து போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்தி ஷா தொடர்ந்து சொதப்பி வருவது அணியின் நம்பிக்கையைக் குலைக்கும். அவருக்குப் பதில் மாற்று வீரரை களமிறக்க டெல்லி முயற்சிக்கலாம். ரகானேவின் கடந்த ஆட்டம் அவர் மீதான எண்ணத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி இருக்கும்.
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சேசிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், அவர் சுழல் பந்து வீச்சில் திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது.டெல்லியின் மிடில் ஆர்டரை பொறுத்தவரை ஸ்டேய்னஸ் மற்றும் அக்சார் பட்டேல் போன்றோர் சிறப்பாகச் செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
டெல்லியின் பந்து வீச்சை பொறுத்தவரை ரபாடா மற்றும் நோர்ட்ஜா இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். பந்து வீச்சு மட்டுமே அணிக்குச் சாதகமான ஒன்றாக உள்ளது. மொத்தத்தில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சற்று ஏராளமாகவே உள்ளது.