தங்க கடத்தல் வழக்கு கேரள ஐஏஎஸ் அதிகாரிக்கு மேலும் 6 நாள் காவல்
தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை மேலும் 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரை கடந்த வாரம் மத்திய அமலாக்கத் துறை கைது செய்தது. இவருக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகள் இருப்பதால் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைப் பரிசீலித்த நீதிமன்றம் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
இதையடுத்து மத்திய அமலாக்கத் துறை சிவசங்கரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணைக்கு முதலில் சிவசங்கரன் எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. முதல் 2 நாட்கள் அவர் சரியாக உணவு சாப்பிடாமல் அடம் பிடித்து வந்தார். ஆனால் அமலாக்கத் துறையின் மிரட்டலைத் தொடர்ந்து பின்னர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.இந்த விசாரணையில் சிவசங்கருக்கு தங்கக் கடத்தலில் மட்டுமில்லாமல், கேரள அரசின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு செய்ததும் தெரியவந்தது. கேரள அரசு சமீபத்தில் கொண்டு வந்த கே போன், லைஃப் மிஷன் உள்பட திட்டங்களில் அவர் கமிஷன் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டங்கள் தொடர்பான பல ரகசிய விவரங்களை ஸ்வப்னா சுரேஷுக்கு அவர் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் 7 நாள் காவல் இன்று முடிவடைவதைத் தொடர்ந்து சிவசங்கரை மத்திய அமலாக்கத் துறையினர் எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.அப்போது, சிவசங்கர் முதல் 2 நாட்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், அவருக்கு எதிராக மேலும் பல்வேறு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதால் மீண்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வரும் 11ம் தேதி சிவசங்கர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. அன்று வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கூறியது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வரும் 11ம் தேதி வரை சிவசங்கரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.