ராமேஸ்வரம் கோயில் நகைகளில் எடைக்குறைவு : ரூ15 லட்சம் செலுத்துமாறு 47 ஊழியர்களுக்கு நோட்டீஸ்
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்குச் சொந்தமான நகைகள் எடை குறைவான இருப்பது தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது இதுதொடர்பாக பெரும் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது.இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 344 நகை வகைகளில் 42 வகையான நகைகளின் எடை குறைந்துள்ளதாகத் தணிக்கை குழுவினர் கடந்த 3ம் தேதி கோயில் நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர்.இந்நிலையில் நகைகளின் எடை குறைவு குறித்து கோவிலில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் குருக்களிடம் தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது கோயில் இணை ஆணையர் கல்யாணி 40 வருடங்களாகக் கோயிலில் பணியாற்றிய குருக்கள், ஊழியர்கள் என 47பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அந்த நோட்டீஸில்தங்கம், வெள்ளி, பவளம், வைடூரியம் என 344 நகை வகைகளில் 42 வகையான நகைகள் தேய்மானம் ஏற்பட்டுள்ளது, இந்த தேய்மானத்திற்கு சுமார் 15லட்சம் ரூபாயை இழப்பீடு தொகையாக நிர்ணயம் செய்துள்ளதோடு இந்த இழப்பீடு தொகையை ஏன் தாங்களிடம் வசூல் செய்யக் கூடாது என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார் இணை ஆணையர் கல்யாணி.
கோயிலில் நகைகளின் எடை குறைவு தொடர்பான சர்ச்சையால் பொது மக்களோ பக்தர்களோ திருக்கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். இந்த நோட்டீஸ் விவகாரம் கோவிலில் பணியாற்றிய மற்றும் பணியாற்றும் ஊழியர்கள் இடையே ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.