அடுத்த ஐபிஎல் சீசன் நிச்சயம் இந்தியாவில் தான்... கங்குலி உறுதி!

சென்னை அணியின் இறுதி ஆட்டத்துக்கு பின் பேசிய கேப்டன் தோனி, ``அணியை இளைஞர்கள் கையில் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுத்த 10 ஆண்டுகளை கவனத்தில் கொண்டு சென்னை அணியை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் அனைத்தும் பிசிசிஐயின் முடிவை பொறுத்தே உள்ளது." என்று குறிப்பிட்டு பேசினார். அதாவது பிசிசிஐ வீரர்களுக்கான ஏலத்தை நடத்துவது குறித்து தான் இப்படி பேசியிருந்தார். இதுதொடர்பாகவும் அடுத்த ஐபிஎல் தொடர்பாகவும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``அடுத்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும்.

அடுத்த சீசனுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்பதால் நிச்சயம் இந்தியாவில் நடக்கும். ஏலம் குறித்து நாங்கள் இதுவரை எதையும் முடிவு செய்யவில்லை. இந்த சீசன் முடிவடையட்டும். அதன்பிறகு ஏலம் குறித்த அழைப்பு விடப்படும்" எனக் கூறியுள்ளார். அடுத்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடக்கும் என்பதை கங்குலி உறுதிப்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>