புறநகர் ரயில்களில் தனியார் ஊழியர்களும் பயணிக்க அனுமதி...!
கொரோனா தளர்வுகளில் ஒன்றாக ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவசியத்தேவை அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்கள் மூலமாகச் சென்றுவர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனியார் நிர்வாக ஊழியர்களும் இந்த ரயில்களில் பயணிக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மின்சார ரயில்கள் மூலமாகச் சென்னைக்குச் சென்றுவந்தனர். கொரோனா தொற்று காரணமாகக் கடந்த சில மாதங்களாகப் புறநகர் ரயில்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்வார் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
கடந்த சில தினங்களாக ரயில்வே பணியாளர்கள் உள்ளிட்ட தமிழக அரசுப்பணியாளர் புறநகர் ரயில்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு இன்று மேலும் தளர்வுகளை அளித்துள்ளது. இதன்படி தனியார் நிர்வாக ஊழியர்களும் சிறப்பு அனுமதி பெற்று புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம் இன்று அறிவித்தது. இதனை வரவேற்ற ரயில் பயணிகள், விரைவில் அனைத்து பயணிகளும் ரயிலில் பயணிக்க அரசு ஆவண செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.