16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை
16 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்தது. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள நரியம்பாறை பகுதியை சேர்ந்தவர் மனு மனோஜ் (24).
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினரான இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியைக் காதலித்து வந்தார். அந்த சிறுமி அப்பகுதியில் ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மனு மனோஜ் அந்த மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த விவரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து மனு மனோஜுக்கு எதிராக அந்த சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் மனு மனோஜ் தலைமறைவானார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாணவி வீட்டுக் குளியலறையில் உடலில் மண்எண்ணையை ஊற்றித் தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அந்த சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த மனு மனோஜை போலீசார் கைது செய்து இடுக்கி மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் மனு மனோஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இடுக்கி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனு மனோஜ் இன்று கழிப்பறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.