தந்தை கட்சியில் இணைய வேண்டாம்.. ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த நடிகர் விஜய்!
திரைப்பட நடிகர்கள் அரசியலில் கால்பதிக்கும் காலம்போல் இது. நீண்ட நாள்களாக அரசியலில் வரவுள்ளதாக ரஜினி அறிவித்து வந்த நிலையில் கமல் திடீரென மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் செய்தார். இந்த வரிசையில் சில வருடங்களாக அரசியல் நோக்கத்துடன் பேசி வந்த நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க விண்ணப்பம் செய்து இருக்கிறார்.
கட்சி தொடங்குவது தொடர்பாக கடந்த வாரம் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில், விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்திய விஜய், தற்போது தலைமை தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் கட்சியை பதிவு செய்தார் எனத் தகவல் பரவியது. அந்த விண்ணப்பத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி பெயர் பொதுச்செயலாளராகவும், அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர் பொருளாளர் என்றும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசியிருக்கிறார். அதில், ``அரசியல் கட்சியை பதிவு செய்ததுக்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க, முழுக்க என் முயற்சியே. இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விஜய் மக்கள் இயக்கம் இன்று, நேற்றல்ல 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் இளைஞர்களின் சக்தி வீணாக கூடாது; அவர்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த முயற்சி" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இவர் விளக்கம் அளித்த சில மணிநேரத்தில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து விளக்கம் வெளியாகியுள்ளது. அதில், ``இன்று என் தந்தை அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.. தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம். அந்தக் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை. இதன்மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
எனது பெயரையும் புகைப்படத்தையும் தற்போது ஆரம்பித்துள்ள கட்சி நடவடிக்கைகளில் பயன்படுத்த வேண்டாம். பயன்படுத்தினால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக, விஜய்க்கும் அவரது தந்தைக்கும் மோதல் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மாறி மாறி அரசியல் கட்சி தொடர்பாக பேசியுள்ளது சண்டையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளது எனப் பேசப்பட்டு வருகிறது.