யார் தடை என்பது அவருக்கே தெரியும்.. ஆளுநரை குறிவைக்கும் வைரமுத்துவின் டுவீட்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் குரல் கொடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்றமும் அவர்கள் விடுதலை குறித்து ஆதரவாகவே பேசி வருகிறது. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு ஆண்டுகளாக விடுதலை குறித்து முடிவு எடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில்கூட, ``ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் மாநில அரசின் இந்த முக்கியப் பரிந்துரையானது, தங்களால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது- அந்த ஏழு பேருக்கும், ஆற்றொணாத் துயரத்தையும், ஈடுசெய்ய முடியாத துன்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது" எனக் கூறியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து எழுவர் விடுதலை தொடர்பாக பேசியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில், ``எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருணை காட்டுகிறது; தமிழக அமைச்சரவை முன்பே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது; எங்களுக்கு மறுப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகிறது. இதன் பிறகும் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.