வீட்டில் தனியாக இருந்த 9 வயது நேபாளி சிறுமி பலாத்காரம்.. தந்தையின் நண்பர் கைது..
கோழிக்கோடு அருகே வீட்டில் தனியாக இருந்த 9 வயது நேபாள சிறுமி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கோழிக்கோடு அருகே உள்ள பாலுசேரி என்ற இடத்தில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி இங்கு வந்தனர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவன் அப்பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் பணிபுரிந்து வருகிறார்.
கல் குவாரியை ஒட்டியுள்ள ஒரு குடிசை வீட்டில் இவர்கள் வசித்து வருகின்றனர். வீட்டில் பலமான கதவுகள் எதுவும் கிடையாது. இந்நிலையில் நேற்று மகளை வீட்டில் விட்டுவிட்டு இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். திரும்பி வந்தபோது அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக மகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . டாக்டர்கள் பரிசோதித்தபோது அந்த சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. உடல் முழுதும் காயங்கள் இருந்தன. இதையடுத்து டாக்டர்கள் அந்த சிறுமியை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்ததால் உடனடியாக அந்த சிறுமி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாலுசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர் அந்த சிறுமியின் தந்தையுடன் கல்குவாரியில் பணிபுரிந்து வருகிறார். அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.