டெல்லியுடன் மோதப்போவது யார்? பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கான கடைசி வாய்ப்பு!
இந்த ஆண்டின் ஐபிஎல் திருவிழா கடைசிக் கட்டத்தை நோக்கி நெருங்கியுள்ளது. நவம்பர் 10 ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், நேற்று நடந்த முதல் தகுதி சுற்றில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தோல்வி அடைந்த டெல்லி அணி இன்றைய எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் விளையாட வேண்டும்.
இன்றைய எலிமினேட்டர் சுற்றில் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி வாகை சூடிய ஹைதராபாத் அணிக்கும், கடைசி மூன்று போட்டிகளில் தோல்வியுற்ற பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.இரு அணிகளுமே மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ந்து சொதப்பி வருவதால் இன்றைய போட்டியில் மிடில் ஆர்டரில் சிறப்பாகச் செயல்படும் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை ஸ்விங் பந்து வீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாகும். சந்தீப் சர்மா சீசனின் இரண்டாவது பாதியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
பெங்களூர் அணியின் முன்னணி பேடஸ்மேன்களான படிக்கல், கோலி மற்றும் டிவில்லியர்ஸ் சுழல் பந்து வீச்சில் தொடர்ந்து சொதப்பி வருவது, ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பலமாகும். ஹைதராபாத் அணியின் ரஷீத் கான் மற்றும் ஷதாப் நதீம் போன்ற வீரர்கள் பெங்களூர் அணியின் பேட்டிங் யூனிட்டை சிதைக்க வாய்ப்புண்டு.
பெங்களூர் அணியின் பந்து வீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது அணிக்கான பலவீனம். ஆனால் பெங்களூர் அணியின் ஆஸ்தான சுழல் பந்து வீச்சாளரான சஹல் ஹைதராபாத் அணியை நெருக்கடிக்கு உள்ளாக்க வாய்ப்புண்டு.
ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரைச் சிறப்பான தொடக்கத்தை வார்னர் மற்றும் சஹா இருவரும் அளிக்க வாய்ப்புண்டு. இந்த இணையைப் பிரித்தால் பெங்களூர் அணி வெற்றிக்கான முயற்சியை எடுக்கலாம்.
ஒருவேளை பெங்களூர் டாஸ் வென்றால் பந்து வீச்சைத் தேர்வு செய்யலாம். கடந்த சில போட்டிகளில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டாம் பாதியில் பேட்டிங்கிற்கு சாதகமாகும் அமையும். பலமான பேட்டிங் லைனப்பை கொண்ட பெங்களூர் சேசிங்கில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
பெங்களூர் அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹைதராபாத் அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் சேசிங் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.