சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு ₹526 கோடி நன்கொடை வழங்கியது யார் தெரியுமா?
கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு ஒரு பக்தர் ₹526 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த வைர வியாபாரியான இவர் சோட்டானிக்கரை தேவியின் கருணையால் தான் இப்போதும் உயிருடன் இருப்பதாகக் கூறுகிறார்.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில்களில் குறிப்பிடத்தக்கது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்.
எர்ணாகுளத்தில் உள்ள இக்கோவிலுக்குத் தினமும் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில் இக்கோவிலைப் புனரமைக்கக் கோயில் நிர்வாகம் தீர்மானித்திருந்தது. கோவிலைச் சுற்றியுள்ள சோட்டானிக்கரை நகரத்தையும் புனரமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போதிய நிதி வசதி இல்லாததால் இந்த திட்டம் நீண்டுகொண்டே சென்றது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான கணஸ்ராவன் என்பவர் கோவிலைப் புனரமைக்கத் தான் தயாராக இருப்பதாகக் கூறினார்.பெரும்பாலும் எல்லா மாதங்களிலும் பவுர்ணமி நாளில் இவர் சோட்டானிக்கரை அம்மனை தரிசிக்கப் பெங்களூருவில் இருந்து வருவார். அடிக்கடி வருவதால் கோவில் நிர்வாகிகளுக்கு இவர் பரிச்சயமாகி இருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் கோவில் நிர்வாகிகளைச் சந்தித்து கோவில் புனரமைப்புக்குத் தான் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஏதோ ஒன்றிரண்டு கோடி அவர் தருவார் என நிர்வாகிகள் கருதினர்.
ஆனால் கோவிலைப் புனரமைக்க 300 கோடி தருவதாக அவர் கூறியதைக் கேட்டு கோவில் நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தான் கோவில் நிர்வாகிகளுக்கு ஒரு யோசனை வந்தது. கோவில் புனரமைப்பு பணிகளுடன் சோட்டானிக்கரை நகரத்தையும் புனரமைக்கும் திட்டம் இருப்பதால் அதற்கும் சேர்த்து உதவ வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அதற்கும் சம்மதம் தெரிவித்த வைர வியாபாரி கணஸ்ராவன், இரண்டுக்கும் சேர்த்து ₹ 526 கோடி தரச் சம்மதித்தார்.
கோவில் நிர்வாகிகள் உடனடியாக இதுகுறித்து கொச்சின் தேவசம் போர்டுக்கும், கேரள அரசுக்கும் தகவல் தெரிவித்தனர். வைர வியாபாரி தரும் நன்கொடையைப் பயன்படுத்தி கோவில் புனரமைப்பு பணிகளையும், சோட்டானிக்கரை நகரப் புனரமைப்பு பணிகளையும் தொடங்க கேரள அரசு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்திடமும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். சோட்டானிக்கரை பகவதி அம்மன் மீது இந்த தொழிலதிபருக்கு ஏன் இவ்வளவு பக்தி என்பதை அவரே கூறுகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை நான் தொழிலில் மிகவும் சிரமப்பட்டு வந்தேன்.
கடனுக்கு மேல் கடன் வாங்கி தற்கொலை முடிவுக்குக் கூட சென்றுவிட்டேன். இந்த சமயத்தில் தான் நான் என்னுடைய ஆன்மீக குருவைச் சந்தித்து விவரங்களைக் கூறினேன். அவர் தான் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வருமாறு கூறினார். இதன்படி நான் 3 வருடங்களுக்கு முன் சோட்டானிக்கரை கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தன. என்னுடைய வியாபாரமும் வளர்ச்சி அடைந்தது. கோடிகள் குவிந்தன. அந்த நன்றிக் கடனை செலுத்துவதற்காக வே சோட்டானிக்கரை கோவில் புனரமைப்பு பணிகளுக்காக நான் செலவிட முன்வந்தேன். சோட்டானிக்கரை தேவியின் கருணையால் தான் நான் இப்போதும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடந்த 3 வருடங்களாக எல்லா பவுர்ணமி நாட்களிலும் நான் தேவியைத் தரிசிப்பதற்காக வந்து விடுவேன் என்று கூறினார்.