நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி துறை : உயர்நீதிமன்றம் யோசனை
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குகளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விசாரணை செய்தது.தமிழகத்தின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. நீர்நிலைகளைப் பாதுகாக்க தனித்துறையை ஏற்படுத்தினால் என்ன? அதுபோல நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை எனில் நீர்நிலைகளைக் காப்பாற்ற இயலாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
முன் காலத்தில் பல மன்னர்களும் பேரரசர்களும் ஏராளமான நீர்நிலைகளை உருவாக்கியுள்ளனர். ஆனால் தற்போது பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. இனியாவது நீர்நிலைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் வருங்கால தலைமுறையினர் அல்லாடும் நிலை உருவாகும். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு , தமிழகத்தில் 1980-ஆம் ஆண்டு ஆறு, குளம், ஏரி உட்பட எத்தனை நீர்நிலைகள் இருந்தன? தற்போது எத்தனை உள்ளன? தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித் துறையை அமைக்கக்கூடாது? எனக் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாகத் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.