அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றிமுகம்.. தபால் வாக்குகளில் இழுபறி..
அமெரிக்க அதிபர் தேர்தலில் 4வது நாளாக வாக்கு எண்ணிக்கை நீடித்து வருகிறது. பென்சில்வேனியாவில் ஜோ பைடன் 29 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளதால், அவர் அதிபராவது உறுதியாகி உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார்.
தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை இல்லாத அளவுக்கு இருவருமே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஒருவரை ஒருவர் முந்தி வந்தனர். இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குகள் எண்ணிக்கை முடியும் போது பரபரப்பாகக் காணப்பட்டது.
அமெரிக்கத் தேர்தலில், ஒவ்வொரு மாநிலத்திலும் கிடைக்கும் வாக்கு சதவீதத்தைப் பொறுத்து, எலக்ட்டோரல் காலேஜ் எனப்படும் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் சபைக்கான எண்ணிக்கை முடிவு செய்யப்படும். இதில் மெஜாரிட்டி என்பது 270 இடங்களாகும். இந்த எண்ணிக்கையைக் கைப்பற்றினால் அதிபராகி விடலாம். எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார். எனினும், யார் அதிபராக வெற்றி பெறுவார் என்பது இழுபறியாக நீடித்தது. இன்னும் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை. இதற்குக் காரணம், கொரோனா அச்சம் காரணமாக மெயில் ஓட்டு எனப்படும் தபால் வாக்குகள் இந்த முறை அதிகரித்துள்ளதுதான்.
பென்சில்வேனியா, நவேடா உள்பட 5 மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மெயில் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அரிசோனாவில் 2 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள், ஜார்ஜியாவில் 16 ஆயிரம், நெவேடாவில் ஒரு லட்சத்து 90,150, வடக்கு கரோலினாவில் ஒரு லட்சத்து 16 ஆயிரம், பென்சில்வேனியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இவற்றில் நெவேடாவிலும், அரிசோனாவிலும் ஜோ பிடனுக்கு அதிக வாக்குகள் கிடைத்து முந்தி வந்தார். இந்நிலையில், பென்சில்வேனியாவிலும் ஜோ பைடன் அதிக வாக்குகளைப் பெற்று வருகிறார். அங்கு ஜோ பைடன் 33 லட்சத்து 37068 வாக்குகளையும்(49.6%), டிரம்ப் 33 லட்சத்து 8192 வாக்குகளையும்(49.2%) பெற்றுள்ளனர். பென்சில்வேனியாவும் டிரம்ப்புக்கு கை கொடுக்காததால், ஜோ பைடன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. அவர்தான் அடுத்த அதிபர் என்று தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் கணிக்கத் தொடங்கியுள்ளன.
எனினும், தபால் வாக்குகள் எண்ணி முடித்த பிறகே, எலக்டோரல் ஓட்டு எண்ணிக்கை தெரிய வரும். அரிசோனாவில் 11, ஜார்ஜியாவில் 16, நெவேடாவில் 6, வடக்கு கரோலினாவில் 15, பென்சில்வேனியாவில் 20 எலக்டோரல் ஓட்டுகள் உள்ளன. இவற்றில் 7 ஓட்டுகளைப் பெற்றாலே, ஜோ பிடன் வெற்றி பெற்றவராகி விடுவார்.இதற்கிடையே, மிக்சிகன், பென்சில்வேனியா உள்பட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதைச் சுட்டிக் காட்டி டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஜோ பைடன் இப்போதே வெற்றி பெற்று விட்டதாகக் கோர முடியாது. சட்டப் போராட்டம் முடிந்த பின்புதான் முடிவு வெளிவரும் என்று கூறியிருக்கிறார்.