ஐபிஎல் போட்டிகளில் கலக்கும் யார்க்கர் நடராஜன்... தமிழக வீரருக்கு குவியும் பாராட்டு...!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் யார்க்கர் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும் தமிழக வீரர் நடராஜனுக்குப் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. நேற்றைய போட்டியில் பெங்களூருவின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்சை அவர் பவுல்டாக்கிய வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த ஐபிஎல் சீசன் வரை நடராஜன் என்றால் அதிகமாக யாருக்கும் தெரியாது.
ஆனால் இந்த சீசனில் நடராஜனின் பெயரைக் கேட்டாலே எதிரணி பேட்ஸ்மேன்கள் கலக்கமடைகின்றனர். டென்னிஸ் பந்தில் விளையாடித் தான் நடராஜன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக் அணியில் இடம் பெற்றார். அங்குச் சிறப்பாக ஆடியதைத் தொடர்ந்து கடந்த 2017 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி நடராஜனை 3 கோடி கொடுத்து வாங்கியது.
ஆனால் முதல் சீசனில் அவர் சிறப்பாக ஆடவில்லை. 6 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அடுத்த சீசனில் நடராஜனின் விலை மிகவும் குறைந்தது. வெறும் ₹40 லட்சத்திற்கு மட்டுமே ஹைதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.2018 மற்றும் 19 சீசனில் அவருக்குப் பந்துவீச அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அதைக் கண்டு நடராஜன் மனம் தளரவில்லை. மீண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் கலந்துகொண்டு விளையாடினார். மேலும் செய்யது முஷ்டாக் அலி டிராபிக்கான தமிழ்நாடு அணியில் நடராஜன் இடம்பெற்றார். இவரது சிறப்பான பந்து வீச்சு மூலம் தமிழ்நாடு அந்த போட்டியில் இறுதி வரை சென்றது.
இப்போது நடராஜனின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது. இவரது பெயரை யார்க்கர் நடராஜன் என்று மாற்றிவிடலாம் என்று பிரபல டிவி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறுகிறார். இந்த சீசனில் முதல் போட்டியில் பெங்களூரு கேப்டன் கோஹ்லியை தன்னுடைய யார்க்கர் மூலம் அவுட்டாக்கி தனது அதிரடியைத் தொடங்கினார். இதன் பின்னர் டெல்லி அணியுடன் மோதும் போது இவர் வீசிய யார்க்கர்கள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன.
அன்றைய போட்டியில் 16 மற்றும் 18வது ஓவர்களில் நடராஜன் வீசிய யார்க்கர்களால் அதிரடி ஆட்டக்காரர்களான ரிஷப் பந்த், ஹெட்மெயர் மற்றும் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய 3 பேரும் கதிகலங்கி போனார்கள். 16-வது ஓவரில் 4 யார்க்கர்களையும், 2 லோ புல்டாஸ்களையும் வீசினார். 18-வது ஓவரில் 4 யார்க்கர்களையும் வீசினார். அந்த ஒரு போட்டியில் மட்டும் மொத்தம் 12 யார்க்கர்களை நடராஜன் வீசினார். அந்த போட்டியில் 4 ஓவரில் 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் இவர் கைப்பற்றினார்.இந்த சீசனில் மட்டும் நடராஜனின் யார்க்கருக்கு சரணடைந்தவர்கள் அனைவரும் அதிரடி, முன்னணி ஆட்டக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோஹ்லி, ஷேன் வாட்சன், தோனி, ஆந்த்ரே ரசல் உள்பட அதிரடி பேட்ஸ்மேன்கள் நடராஜனின் யார்க்கர்களை சமாளிக்க முடியாமல் அவுட் ஆனார்கள். அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் பெங்களூரு அதிரடி வீரர் டிவில்லியர்சை நடராஜன் அவுட்டாக்கிய காட்சியை யாராலும் எளிதில் மறக்க முடியாது. டிவில்லியர்சின் மிடில் ஸ்டம்ப் பறந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த அற்புதமான பந்துவீச்சைப் புகழாதவர்கள் யாருமே இல்லை. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, 'நடராஜனை இனி யார்க்கர் நடராஜன் என அழைப்பது தான் சிறந்தது' என்று கூறுகிறார்.