பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொன்ன கேரள முதல்வர்
இன்று 66-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அற்புத கலைஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தன்னுடைய பேஸ்புக்கில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று தன்னுடைய 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதையொட்டி இன்று காலையிலேயே சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் குவிந்தனர். திறந்த வேனில் நின்றபடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களைக் கமல் சந்தித்தார். கமலை பார்த்த உற்சாகத்தில் அனைவரும் உற்சாகமாகி அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை கமல் கைகூப்பி ஏற்றுக்கொண்டார்.
ரசிகர்கள் மட்டுமில்லாமல் நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் கமலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்தார். இதனால் கமல் கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கமல்ஹாசனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்பாக சந்தித்த தலைவர்களில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஒருவர் ஆவார்.
திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். கட்சி மென்மேலும் வளர வேண்டும் என்று கமலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் பினராயி விஜயன் பேஸ்புக் மூலம் கமலுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'அற்புத கலைஞரும், பன்முக வித்தகருமான கமல்ஹாசன் இந்தியாவின் கலாச்சாரத்திற்கு ஏராளமான சேவைகளைச் செய்துள்ளார். நம்முடைய நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற தன்மையை வலிமைப்படுத்தக் கமலஹாசன் நடத்தும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.