சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த மண்டல காலத்தில் புஷ்பாபிஷேகம் கிடையாது...! நெய்யபிஷேகத்திற்கும் கட்டுப்பாடு...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் பக்தர்களுக்கு புஷ்பாபிஷேகம் நடத்த முடியாது. நெய்யபிஷேகம் நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்க இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. மண்டல கால பூஜைகளுக்காக வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

மறுநாள் 16ம் தேதி முதல் மண்டலக் கால பூஜைகள் தொடங்குகின்றன. 41 நாள் நீளும் மண்டல காலம், டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடையும். சபரிமலையில் வழக்கமாக மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த சீசன்களில் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படும். ஆனால் இவ்வருடம் நிலைமை தலைகீழாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகத் திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.கொரோனா பரவலைத் தொடர்ந்து இவ்வருடம் சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு நெய்யபிஷேகம் மிக முக்கியமானதாகும். பக்தர்கள் இதற்காக நெய் தேங்காய் கொண்டு வருவார்கள். மேலும் பாத்திரங்களிலும் நெய் கொண்டு வருவது உண்டு. இந்த நெய்யை நேரடியாகக் கோவிலில் கொடுத்து அபிஷேகம் செய்து அதைப் பிரசாதமாகப் பக்தர்கள் வாங்கிச் செல்வார்கள்.

ஆனால் இந்த முறை பக்தர்களால் அவ்வாறு நேரடியாக நெய்யபிஷேகம் நடத்த முடியாது. இதற்காகத் தனியாகக் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கவுண்டரில் நெய் தேங்காய் மற்றும் நெய்யைக் கொடுக்க வேண்டும். பின்னர் அபிஷேகம் செய்த நெய் பக்தர்களுக்குத் தனியாகக் கொடுக்கப்படும். இதேபோல சபரிமலையில் பக்தர்கள் புஷ்பாபிஷேகம் நடத்துவது உண்டு. இது மிக முக்கிய பூஜையாகக் கருதப்படுகிறது. இதற்குப் பெருமளவு பூக்கள் பயன்படுத்தப்படும். பெரும்பாலும் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து தான் பூக்கள் சபரிமலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

கொரோனா பரவல் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து பூக்கள் கொண்டு வர வேண்டாம் எனச் சபரிமலை கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து இவ்வருடம் மண்டலக் காலத்தில் புஷ்பாபிஷேகம் நடத்துவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வருடம் சபரிமலை செல்லும் பக்தர்கள் இரண்டு வழிகள் மட்டுமே செல்ல முடியும். வடசேரிக்கரையில் இருந்து பம்பை அல்லது எருமேலியில் இருந்து பம்பை வழியாக மட்டுமே சபரிமலைக்குச் செல்ல முடியும்.இதற்கிடையே சபரிமலையில் தென்மாநில பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த தென்மாநில அறநிலையத் துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

காணொலி மூலம் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் தென்மாநில பக்தர்களுக்குச் சபரிமலையில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கேரள அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கூட்டத்தில் கூறுகையில், தற்போதைக்கு தினமும் 1,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்றம் அனுமதித்தால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இவ்வருடம் சபரிமலை பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து தென் மாநில அரசுகள் பக்தர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

More News >>