என் அம்மா நினைத்து பார்த்திருக்கவே மாட்டார்.. கமலா ஹாரிஸ் மகிழ்ச்சி..
நான் இந்த இடத்திற்கு வருவேன் என்பதை என் அம்மா நினைத்து பார்த்திருக்கவே மாட்டார். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்று அமெரிக்க துணை அதிபராகியுள்ள தமிழ்வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் கூறியிருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிட்டனர். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். கமலா ஹாரிசின் தாயார் சியாமளா கோபாலன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாய்வழி சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். சிறிய வயதிலேயே சியாமளா கோபாலன் அமெரிக்காவுக்கு சென்று நிரந்தரமாக தங்கி விட்டார்.
தற்போது அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இருவரும் நேற்று தங்கள் ஆதரவாளர்கள் முன்பாக தோன்றி உரையாற்றினர். அப்போது கமலா ஹாரிஸ் பேசியதாவது: ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது மிகப் பெரிய போராட்டம். இதற்கு பெரிய தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அதன் முடிவில் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் நிச்சயமாக இருக்கும். நம்மிடம் அதற்கான சக்தி கிடைத்திருக்கிறது. நான் இன்று இந்த இடத்தில்(துணை அதிபராக) நிற்பதற்கு, எனது பொறுப்புமிக்க அம்மாவே காரணம். எனது அம்மா தனது 19 வயதில் அமெரிக்காவுக்கு வந்து நிரந்தரமாக குடியேறினார். அப்போது அவர், நான் இந்த அளவுக்கு வருவேன் என்பதை நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். அதே சமயம், அமெரிக்காவின் ஜனநாயகத்தில் எதுவும் சாத்தியம் என்பதை அவர் நம்பினார்.
அவரது காலத்து வெள்ளையர் பெண்கள், கறுப்பின பெண்கள், லத்தீன் பெண்கள், ஆசியப் பெண்கள் என்று எல்லோரையும் நினைத்து பார்க்கிறேன். அவர்கள் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.