அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனுக்கு மோடி, சோனியா வாழ்த்து..

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிட்டனர். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். தற்போது அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், உங்களது சிறப்பான வெற்றிக்கு பாராட்டுகள்.

துணை அதிபராக நீங்கள் இருந்த போது இந்திய-அமெரிக்க உறவுக்காக நீங்கள் ஆற்றிய பணிகள் மிகவும் மதிப்புமிக்கவை. இந்திய அமெரிக்க உறவை மேலும் பலப்படுத்துவதில் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், அறிவார்ந்த, முதிர்ச்சியான ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையில் அமெரிக்கா, இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு அமைதி, வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட ட்விட்டில், அதிபர் ஜோ பைடனுக்கு பாராட்டுகள். அமெரிக்காவின் ஒற்றுமையைப் பேணி, சரியான பாதையில் எடுத்து செல்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>