கொரோனாவும் குளிர்காலமும்: நுரையீரலை பாதுகாப்பது எப்படி?

குளிர்காலமும் பண்டிகை காலமும் நெருங்குகிறது. கோவிட்-19 பெருந்தொற்றினிடையே காற்றும் அநேக நகரங்களில் மாசடைகிறது. காற்றில் ஏற்படும் மாசு, கொரோனா வைரஸ் இரண்டுமே நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. நுரையீரலை பாதுகாப்பதற்கான சரியான முறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம்.

சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசினால் தேங்கும் நச்சுகள், தீமை பயக்கக்கூடிய பொருள்கள் ஆகியவை சரியான கால இடைவெளியில் அகற்றி நுரையீரலை சுத்தப்படுத்தவேண்டியது அவசியம். நுரையீரல் செயல்பாட்டை அது மேம்படுத்துவதுடன், அழற்சியை குறைத்து, பலப்படுத்துகிறது. சுவாச குழலில் இருக்கும் சளி மற்றும் கோழையை சுத்தப்படுத்தவேண்டியதும் தேவையாயிருக்கிறது. நுரையீரலை தொடர்ந்து சுத்தப்படுத்தினால் நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா மற்றும் தொண்டையில் ஏற்படும் தொற்று ஆகியவற்றை குணப்படுத்துவதோடு, மூச்சில் துர்நாற்றத்தையும் தவிர்க்கலாம்.

இஞ்சி டீ

இருமல் மற்றும் சளி இவற்றை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம் இஞ்சி டீ ஆகும். இது அழற்சிக்கு எதிராக செயல்படக்கூடியது. மூச்சுக்குழலில் உள்ள நச்சுகளை அகற்ற இஞ்சி டீ உதவுகிறது. வைட்டமின்களோடு, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் (ஸிங்க்) மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் உள்ளது. இஞ்சி சாற்றுக்கு நுரையீரலில் உள்ள புற்றுநோய் செல்களை கொல்லும் ஆற்றல் இருப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் இஞ்சி டீ அருந்துவது நுரையீரலை பலப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். மசாலா டீயுடன் இஞ்சியை சேர்க்கலாம் அல்லது இஞ்சி சாற்றினை தேன் சேர்த்து பருகலாம்.

இலவங்கபட்டை டீ

நுரையீரலை சுத்தப்படுத்த இலவங்கபட்டை டீ உதவுகிறது. சுவாச கோளாறுகளை குணப்படுத்த பாரம்பரியமாக இலங்கபட்டை பயன்படுத்தப்படுகிறது. ஒரு குவளை நீரில் இரு சிறிய துண்டு பட்டையை போட்டு நீர் பாதியாக வற்றும்வரைக்கும் கொதிக்கவிடவும். வெதுவெதுப்பாக அதை பருகவும். சாதாரணமாக டீ பருகும்போதும் பட்டையை சேர்க்கலாம்.

நீராவி

நுரையீரலை சுத்தப்படுத்த எளிய வழி நீராவியாகும். நீராவியை சுவாசிப்பது காற்றுப்பைகளை திறந்து, நுரையீரலிலுள்ள கோழையை சுத்தப்படுத்துகிறது. குளிர்காலத்தில் தினமும் ஆவி பிடிப்பது அடைபட்டுள்ள காற்று பாதைகளை சுத்தப்படுத்துகிறது. நீரை கொதிக்க வைத்து ஆவியை சுவாசிப்பது சீக்கிரத்திலேயே சுவாசத்தை மேம்படுத்தும்.

மஞ்சள் நீரால் கொப்பளித்தல்

தினமும் தூங்கும் முன்பு மஞ்சள் சேர்த்த நீரால் வாய் கொப்பளிப்பது நுரையீரலிலிருக்கும் நச்சுகளை அகற்றும். வெந்நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு வாய் கொப்பளிக்கவேண்டும். மஞ்சளுக்கு கோழையை கரைக்கும் தன்மை உண்டு. நெஞ்சு இறுக்கத்திலிருந்து இது நிவாரணம் அளிக்கும். பாக்டீரியாக்களை கொன்று சளியையும் இருமலையும் குணப்படுத்தும்.

நல்லெண்ணெய்

மூச்சுப்பயிற்சி செய்வது காற்றுப் பாதையை சுத்தப்படுத்தி, சளி மற்றும் கோழையை அகற்றுகிறது. நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மூச்சுப் பயிற்சி செய்த பின்னர் மூக்கின் இரண்டு துவாரங்களிலும் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விடுவது பயிற்சியின் பலனை இரட்டிப்பாக்கும்.

More News >>