நாடு முழுவதும் அருங்காட்சியகங்கள் வரும் 10ஆம் தேதி திறப்பு...

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், கண்காட்சிகள் போன்றவை இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 10-ம் தேதி முதல் இவற்றை திறந்து மக்கள் பார்வையிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இவற்றுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் 10ம் தேதி முதல் திறக்கப்படும்.

மற்றவை வசதிக்கேற்பவும், சம்பந்தப்பட்ட மாநிலம், நகரம், உள்ளூர் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்பவும், நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றியும் திறக்கலாம். அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றின் வளாகங்கள், சுற்றுப்புறங்கள் அனைத்தும் சீரான இடைவெளியில் சுத்தப்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம்.ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பின்னரும் சுத்தப்படுத்த முடியாத தொடுதல் அடிப்படையிலான டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதை குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மின்தூக்கி (லிப்ட்) பயன்பாடுகள் குறைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத்தலாம் என கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More News >>