அர்னாப் கோஸ்வாமி சிறைக்கு மாற்றப்பட்டார்.. ராஜகட் போராட்டம் நடத்திய பாஜக தலைவர்கள் கைது

உள்கட்டமைப்பு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கொரோனா தனிமை முகாமிலிருந்து சிறைக்கு மாற்றப்பட்டார். அர்னாபுக்கு ஆதரவாக டெல்லி ராஜ்கட்டில் போராட்டம் நடத்திய பாஜக தலைவர்களை போலீசார் கைது செய்தனர். ரிபப்ளிக் டிவியின் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு பணிகளை அன்வை நாயக் என்பவர் செய்திருந்தார். இந்தப் பணிகளுக்காக அன்வை நாயக்கிற்கு கொடுக்க வேண்டிய தொகையில் பெரும் தொகை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் அன்வை நாயக் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில் அர்னாப் கோஸ்வாமி தான் தனது தற்கொலைக்கு காரணம் என அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அன்வை நாயக்கின் மனைவி மும்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இந்த வழக்கில் அர்னாபுக்கு தொடர்பில்லை என கூறினர். இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க மகராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டார். இதன்படி விசாரணை நடத்திய போலீசார் கடந்த வாரம் அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது போலீசுக்கும், அர்னாபின் குடும்பத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள கொரோனா தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்தது. இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி இன்று நவிமும்பையில் உள்ள தலேஜா மத்திய சிறைக்கு திடீரென மாற்றப்பட்டார். கொரோனா தனிமை முகாமில் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி ராஜ்கட்டில் போராட்டம் நடத்திய பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா மற்றும் தஜீந்தர் பால் சிங் பாகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராஜ்கட்டில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக இருவரையும் கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

More News >>