ஹைதராபாத் அணியை வீழ்த்தி, முதல்முறையாக அரையிறுதிக்குள் முன்னேறுமா டெல்லி?
ஐபிஎல் 2020 சீசனின் இரண்டாவது தகுதி சுற்று சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடைபெற உள்ளது. முதல் தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய டெல்லி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்த டெல்லி அணி லீக் சுற்றில் பெங்களூர் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை அடைந்தது. எனவே முதல் தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று நேரடியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. எலிமினேட்டர் சுற்றில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருந்த சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இதில் எளிதாக வென்று இரண்டாவது தகுதி சுற்றுக்குள் ஹைதராபாத் அணி நுழைந்துள்ளது.
ஐபிஎல் லீக் சுற்றின் முதல் பாதியில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த ஹைதராபாத் அணி, இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு, எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஹைதராபாத் அணியை பொறுத்தவரை அவர்களின் பலமே பந்து வீச்சு தான். சந்தீப் சர்மா, நடராஜன் மற்றும் ஜேசன் ஹோல்டர் போன்றோரின் நேர்த்தியான பந்து வீச்சு எதிரணியினரை திக்குமுக்காட வைத்துள்ளது. கடைசியாக நடந்த போட்டிகளில் ஒரு போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகள் அனைத்திலும் எதிரணியை 150 ரன்னுக்குள் சுருட்டி அணிக்கு பெரிய பலத்தை அளித்தனர். மேலும் சுழல் பந்து வீச்சாளரான ரஷீத் கான் டெல்லி அணியை கடந்த இரண்டு போட்டிகளிலும் தனது சுழலில் சின்னாப்பின்னம் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை சஹா இல்லாதது பெரிய இழப்பு. ஆனால் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வில்லியம்சன் அந்த குறையை போக்குவார். வார்னரின் அதிரடி, ரஷீத் கானின் சுழல் மற்றும் ஹேல்டரின் ஸீவிங் பந்து ஹைதராபாத் அணிக்கு பெரிய பலத்தை தரும். டெல்லி அணியை பொறுத்தவரை அவர்களுக்கு சரியான தொடக்கம் அமையாதது பெரிய பலவீனம். ப்ரித்வி ஷாவின் தொடர் சொதப்பல் அணியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும். அவருக்கு பதில் மாற்று வீரரை முயற்சிக்கலாம். கடந்த போட்டியில் விளையாடிய டேனியல் சாம்ஸ் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவருக்கு பதில் ஸ்விங் பந்து வீச்சாளரான ஹர்ஷா பட்டேலை உள்ளெடுத்து, ஹெட்மயரை விளையாட வைக்கலாம்.
மேலும் ஸ்டேய்னஸை இந்த முறை தொடக்க ஆட்டக்காரராக பரிச்சையிக்கலாம். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை ரபாடா மற்றும் நோர்ட்ஜா இருவரும் ஒன்றினைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றியை முயற்சிக்கலாம். இந்த இரு அணிகளிலும் உள்ள பலவீனம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். கடந்த சில போட்டிகளில் ஸ்டார் பேட்ஸ்மேன்கள் தவறும் பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும். எனவே மிடில் ஆர்டரில் சிறப்பிக்கும் அணி வெற்றி பெற வாய்ப்புண்டு. ஆனால் அனைத்திலும் குறைந்தளவு சாதகத்தன்மையை கொண்ட ஹைதராபாத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.