பரோல் முடியும் முன்பே சிறைக்கு திரும்பும் சசிகலா: குடும்ப பிரச்னை காரணமா ?

கணவரின் இறுதிச்சடங்களில் கலந்துக் கொள்வதற்காக வந்த சசிகலா பரோல் காலம் முடிவதற்கு முன்பே நாளை சிறைக்கு திரும்புகிறார். குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியாமல் அவர் சிறைக்கே திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். இவர், தஞ்சையில் அருளானந்த நகரில் உள்ள வீட்டில் தங்கி வருகிறார்.  சசிகலாவை சந்தித்து துக்கம் விசாரிக்க தினமும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று நடராஜனின் சகோதரர் குடும்பத்தினர் விளாரி கிராமத்தில் ஈமச்சடங்குகளை நடத்துகின்றனர். இதை தொடர்ந்து, இன்று அவரது மண்டபத்தில் படத்திறப்பு விழா நடைபெறுகிறது.

இதற்கிடையே, குடும்பத்திற்குள் பிரச்னை, டிடிவி தினகரனுக்கும் விவேக்கிற்கும் மோதல் போக்கு, சொத்து பிரச்னை, டிடிவிக்கும் திவாகரனுக்கும் நீடித்து வரும் உள்போர் என பல்வேறு பிரச்னைகளை பரோலில் வந்த சசிகலா சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.

நான் சிறையில் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் ஆளாளுக்கு ராஜாங்கம் செய்து வந்தால் எப்படி குடும்பத்தை கட்டி காப்பீர்கள் என ஆதங்கப்பட்டு உள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சசிகலா நாளை சிறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

சசிகலாவிற்கு வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் பரோல் காலம் முடிவடைகிறது. ஆனால், குடும்ப பிரச்னைகளை சமாளிக்க முடியாமல், இன்று படத்திறப்பு விழா முடிந்த நிலையில் நாளை பெங்களூரு சிறைக்கு செல்கிறார் என கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>