சீனாவுக்கு டாட்டா காட்டி இந்தியா வந்த ஜெர்மன் ஷூ நிறுவனம்
ஷூ உற்பத்தியில் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஒன்று வோன் வெல்க்ஸ் என்ற ஜெர்மன் நிறுவனம். சீனாவிலிருந்து தனது ஒட்டுமொத்த உற்பத்திப் பிரிவையும் இந்தியாவிற்க்கு மாற்றியுள்ளது. கொரோனா விவகாரத்துக்குப் பிறகு சீனாவிலிருந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் முட்டை கட்டி வெளியேறி வருகின்றன. அப்படி வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநில அரசு இதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து வோன் வெல்க்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு முதல் கட்டமாக ஆக்ராவில் துவக்கப்பட்டுள்ளது. வோன் வெல்க்ஸ் நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் விரைவில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 110 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு ஆண்டுக்கு 30 லட்சம் காலணிகளை உற்பத்தி செய்யும் பிரிவை ஆக்ராவில் துவங்க உள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் லாட்ரிக்ஸ் நிறுவனத்துடன் வோன் வெல்க்ஸ் நிறுவனம் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. லாட்ரிக்ஸ் நிறுவனம் ஒரு ஆண்டிற்கு ஐந்து லட்சம் காலணிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக காலணி உற்பத்தியுடன் தொடர்புடைய சில துணை நிறுவனங்களைத் துவங்கும் பணிகளில் வோன் வெல்க்ஸ் நிறுவனம் ஈடுபட திட்டமிட்டு வருகிறது.
ஆக்ரா நகரில் துவக்கப்பட்டுள்ள உற்பத்தி பிரிவைத் தொடர்ந்து ஜீவா என்ற இடத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் மற்றொரு உற்பத்தி பிரிவை அடுத்த மாதம் துவக்க திட்டமிட்டுள்ளது. மூன்றாவது உற்பத்திப் பிரிவு கோசி கோர்ட் வான் என்ற இடத்தில் 7.5 ஏக்கர் பரப்பில் அதன்பின் அமைய உள்ளது. வோன் வெல்க்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இயார்டிக் இணடஸ்ட்ரிஸ் குழுமம் இந்த ஷூ உற்பத்தி தொழில் நிறுவனங்களை அமைத்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு தேவையான தொழில்நுட்பத்தை வோன் வெல்க்ஸ் நிறுவனம் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் வோன் வெல்க்ஸ் நிறுவனம் ஒரு ஆண்டிற்கு 25 லட்சம் ஷூக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட வகையில் நவீன தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.