மகாராஷ்டிராவில் தீபாவளிக்குப் பின்னர் பள்ளிகள், கோவில்கள் திறக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கோவில்கள் தீபாவளிக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கோவில்கள் எதுவும் திறக்கப்படவில்லை. கோவில்களை உடனே திறக்க வேண்டும் என்று மகராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷியாரி பலமுறை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தினார்.

கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உத்தவ் தாக்கரேவுக்கு அவர் கடிதமும் அனுப்பியிருந்தார். மேலும் பாஜக சார்பில் கோவில்களை திறக்கக்கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் தீவிரமாக ஆலோசனை நடத்திய பின்னரே கோவில்களை திறக்க முடியும் என்றும், உடனடியாக இதில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் உத்தவ் தாக்கரே கூறி வந்தார்.இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தீபாவளிக்குப் பின்னர் பள்ளிகள் மற்றும் கோவில்கள் திறக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: தீபாவளி பண்டிகைக்கு பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் கோவில்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே முதலில் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

கோவிலில் மூத்த குடிமக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு நோய் எளிதில் பரவ அதிக வாய்ப்புண்டு. எனவே கோவில்களில் அதிக கூட்டம் கூடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முகக் கவசம் அணிவது, சமூக அகலத்தை கடைபிடிப்பது போன்ற கொரோனா நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>