ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால் போலீசிடம் வசமாக சிக்கிய கொலையாளி
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால், 8 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கொலையாளி போலீசிடம் வசமாக சிக்கினான். உத்திரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் பேணிகஞ்ச் என்ற கிராமம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் அவனது பாட்டி வீட்டுக்கு சென்ற போது திடீரென காணாமல் போனான். சிறுவன் காணாமல் போன சிறிது நேரத்திலேயே அந்த சிறுவனின் தந்தைக்கு அவரது செல்போனில் ஒரு எஸ்எம்எஸ் தகவல் வந்தது. அதில், 2 லட்சம் பணத்துடன் உடனடியாக சித்தாபூர் பகுதிக்கு வர வேண்டும், பணத்துடன் வந்தால் தான் மகன் உயிருடன் கிடைப்பான். போலீசுக்கு தகவல் தெரிவித்தால் அவனை கொன்று விடுவேன் என்று அந்த எஸ்எம்எஸ் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த சிறுவனின் தந்தை பேணிகஞ்ச் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிறுவனின் தந்தைக்கு எஸ்எம்எஸ் தகவல் வந்த செல்போன் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சைபர் செல் போலீசாரின் உதவியுடன் விசாரித்தபோது அந்த சிம்மின் உரிமையாளர் குறித்த விவரம் கிடைத்தது. உடனடியாக அவரை பிடித்து விசாரித்தபோது தன்னுடைய செல்போன் சில மாதங்களுக்கு முன் திருடு போய் விட்டதாக கூறினார். இது போலீசாருக்கு ஏமாற்றத்தை தந்தது. இதனால் சிறுவனை கடத்திய ஆசாமியை நெருங்க முடியாமல் போலீசார் தவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சிறுவனின் அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் சந்தேகத்திற்கிடமான 10 நபர்கள் பிடிபட்டனர். அந்த 10 பேரில் ஒருவர் தான் சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி என போலீசாருக்கு தெரியவந்தது.
ஆனால் யார் அந்த நபர் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படி விசாரித்தும் யாரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் ஒரு யோசனை போலீசுக்கு வந்தது. கொலையாளி சிறுவனின் தந்தைக்கு அனுப்பிய எஸ்எம்எஸ் தகவலில் போலீஸ் என்ற வார்த்தையும் சித்தாபூர் என்ற வார்த்தையும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் காணப்பட்டன. ஆங்கிலத்தில் police என்பதற்கு பதிலாக pulish என்றும், Sitapur என்பதற்கு பதிலாக Seeta Pur என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் 10 பேருக்கும் பேப்பரும், பேனாவும் கொடுத்து 'எனக்கு போலீசில் வேலை வேண்டும், ஹர்தோயிலிருந்து சித்தாபூர் வரை ஓடுவதற்கு என்னால் முடியும்' என்று ஆங்கிலத்தில் எழுதுமாறு கூறினர்.
10 பேரில் ஒருவர் மட்டும் போலீஸ் என்ற வார்த்தையையும், சித்தாபூர் என்ற வார்த்தையையும் எஸ்எம்எஸ் தகவலில் வந்தததைப் போலவே தவறாக எழுதினான். உடனடியாக போலீசார் அந்த நபரை பிடித்து முறைப்படி விசாரித்தபோது அந்த ஆசாமி குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது அவனது பெயர் ராம் பிரதாப் சிங் என தெரிய வந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவனை சிறையில் அடைத்தனர். இப்படி ஸ்பெல்லிங் மிஸ்டேக் காரணமாக அந்த கொலையாளி போலீசில் வசமாக சிக்கினான்.