அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியது.. பரவலைத் தடுக்க ஜோ பைடன் நடவடிக்கை..
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உலகிலேயே இந்நோய் பாதிப்பில் ஒரு கோடியைத் தாண்டிய முதல் நாடாக அமெரிக்கா உள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது 5 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில் 3 கோடியே 57 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 12 லட்சம் பேர் பலியாகி விட்டனர்.
உலகிலேயே அமெரிக்காவில்தான் இந்த வைரஸ் நோய், அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தற்போது தினமும் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு லட்சத்து 31,420 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் முதன் முதலில் வாஷிங்டனில் தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதன்பின், 293 நாட்கள் முடிந்த நிலையில் இன்று(நவ.9) வரை அந்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. ஒரு கோடியே 2 லட்சத்து 88,480 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், முதல் நடவடிக்கையாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், மருத்துவ நிபுணர்கள் விவேக் மூர்த்தி, டேவிட் கெஸ்லர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 85 லட்சம் பேருக்கும், 3வதாக பிரேசிலில் 56 லட்சம் பேருக்கும் இது வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது.