திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் தீப்பிடித்த அலுவலகத்தில் 2 மது பாட்டில்கள் வந்தது எப்படி?
திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகத்தில் தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் 2 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அவர்களது நாடுகளிலிருந்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை வரவழைக்க வேண்டும் என்றால் அந்தந்த மாநிலங்களில் உள்ள புரோட்டாகால் தலைமை அதிகாரியின் அனுமதி தேவையாகும். புரோட்டோகால் அதிகாரியின் அனுமதி இருந்தால் மட்டுமே அவர்களது நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடியும்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அமீரக தூதரகத்திலிருந்து கேரள புரோட்டாகால் தலைமை அதிகாரியின் அனுமதி பெறவில்லை. திருவனந்தபுரத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் அமீரக தூதரகம் திறக்கப்பட்டது. இதன் பின்னர் அமீரக நாடுகளில் இருந்து தூதரகத்திற்கு ஏராளமான பார்சல்கள் வந்தன. இவை அனைத்திற்கும் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அமலாக்கத் துறையும், சுங்க இலாகாவும் விசாரணை நடத்தி வருகிறது. இவை தொடர்பான ஆவணங்கள் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் உள்ள புரோட்டாகால் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த புரோட்டோகால் அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்தது. இதில் ஏராளமான பைல்கள் எரிந்து சாம்பலாயின. இந்த சம்பவம் அப்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கக் கடத்தல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகாவிடம் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவை எரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் மின்கசிவு தான் தீ விபத்திற்குக் காரணம் என்றும், இதில் எந்த சதித் திட்டமும் இல்லை என்று கேரள அரசு கூறியது. இதற்கிடையே தடயவியல் நிபுணர்கள் இந்த தீ விபத்து நடந்த இடத்திற்குச் சென்று பரிசோதனை நடத்தினர்.
பின்னர் இந்த பரிசோதனை அறிக்கை திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தீ விபத்துக்கு மின் கோளாறு காரணமல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.தடயவியல் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்த இந்த தகவல் கேரள அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் தீ விபத்து நடந்த இடத்தில் தடவியல் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை அறிக்கை திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பரிசோதனை அறிக்கையிலும் தீ விபத்திற்கு மின் கோளாறு காரணமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த இடத்தில் 2 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மிகுந்த அரசு தலைமைச் செயலகத்தில் மதுபாட்டில்கள் எப்படி வந்தன என்பது மர்மமாக உள்ளது. இதையடுத்து இந்த தீ விபத்து சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நிலவுகிறது.