மெகா ஸ்டாருக்கு கொரோனா தொற்று உறுதி.. தனிமைப்படுத்தி சிகிச்சை..

கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அமிதாபச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி, எஸ்பி.பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா என பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறகு மீண்டாலும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். டாக்டர் நடிகர் ராஜசேகர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவர் குணம் அடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் கொரோனா தொற்றில்லாத போதிலும் இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான்கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. நடிகர் சேது, வடிவேல் பாலாஜி ஆகியோர் மாரடைப்பில் மரணம் அடைந்தனர். இந்நிலையில் புதுமுகங்கள் நடித்த விசிறி படத்துக்கு இசை அமைத்தவர் நவீன் சங்கர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர் சாலிகிராமத்தில் மியூசிக் ஸ்டுடியோ வைத்திருந்தார்.

வீட்டுக்கு ஒரே மகனான நவீன் சங்கர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் இல்லை என்று கூறப்பட்டது. கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கி ஒரு மாதம் கடந்த போதிலும் தெனிந்திய சீனியர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்றவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்காமலிருந்தனர். நடிகர் சிரஞ்சீவி ஆச்சார்யா படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பில் இன்றுமுதல் பங்கேற்கவிருந்தார். படப்பிடிப்புக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா பாசிடிவ் என தெரியவந்தது. என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னை தொடர்புகொண்டவர்களும் தங்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்பட்டுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சிரஞ்சீவி கூறி உள்ளார். சிரஞ்சீவி விரைந்து குணம் அடைய திரையுலகினரும் ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More News >>